தாயமங்கலத்தில் பங்குனி பொங்கல் விழா பக்தர்கள் வருகை அதிகரிப்பு
இளையான்குடி: இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா நாளை நடைபெற உள்ள நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா வருடம் தோறும் 10 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் இந்த வருடத்திற்கான விழா மார்ச் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து அம்மன் சிம்மம், யானை, கிளி, அன்னம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். பங்குனி மாதம் பிறந்ததிலிருந்தே தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தீச்சட்டிகள், ஆயிரம்கண் பானை, கரும்பாலை தொட்டில், அங்கப்பிரதட்சணம் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக் கடன்களை செலுத்தி பொங்கல் வைத்து ஆடு, கோழிகளை பலியிட்டு அம்மனை வேண்டி வருகின்றனர். நாளை பொங்கல் விழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.இதனால் 2 டி.எஸ்.பி., 6 இன்ஸ்பெக்டர்கள், 10 க்கும் மேற்பட்ட எஸ்.ஐ.,க்கள் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏப்., 6ம் தேதி இரவு 7:20 மணிக்கு மின் அலங்கார தேர் பவனியும், ஏப்., 7ம் தேதி பால்குடம், ஊஞ்சல் உற்ஸவம், பூப்பல்லாக்கு நடைபெறும். ஏப்., 8 தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறும்.