எஸ்.கரிசல்குளத்தில் நாளை பங்குனி பொங்கல் விழா
மானாமதுரை: மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் முத்துமாரியம்மன் கோயிலில் நாளை பங்குனி பொங்கல் விழா நடைபெற உள்ளது.மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் முத்து மாரியம்மன் கோயிலில் வருடம்தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டிற்கான விழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து எஸ்.கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானபக்தர்கள் கோயிலில் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். விழா நாள்களின் போது தினம்தோறும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள்,பூஜைகள் நடைபெற்று அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா நாளை நடைபெற உள்ளது. எஸ்.கரிசல்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம், பூக்கரகம், தீச்சட்டிகள், கரும்பாலை தொட்டில், ஆயிரங்கண் பானை மற்றும் அலகுகள் குத்தி ஊர்வலமாக வந்து கோயிலுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள பூக்குழியில் தீமிதித்து அம்மனை வழிபட உள்ளனர்.