உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரோட்டோரம் நடப்பட்ட கட்சிக்கொடிகள் சிவகங்கையில் வாகன ஓட்டிகள் சிரமம்

ரோட்டோரம் நடப்பட்ட கட்சிக்கொடிகள் சிவகங்கையில் வாகன ஓட்டிகள் சிரமம்

சிவகங்கை: சிவகங்கையில் அரசியல் கட்சி நிகழ்ச்சிக்கு பங்கேற்க வரும் தலைவர்களை வரவேற்பதற்கு ரோட்டில் ஊன்றப்படும் கொடிகளால் விபத்து அபாயம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். சிவகங்கையில் மதுரை தொண்டி ரோடு, அரண்மனை பகுதி, ராமச்சந்திர பூங்கா உள்ளிட்ட பகுதியில் அரசியல் கட்சியினர் தங்களது பொது கூட்டங்கள் ,ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர். இவ்வாறு நடத்தும் போது தங்களின் கட்சி தலைவர்களை வரவேற்பதற்காக தேசிய நெடுஞ்சாலையில் கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர்களை வைக்கின்றனர். அதேபோல் திருமண நிகழ்ச்சிக்கும் நகரில் உள்ள திருமண மண்டபங்கள் முன்பாகவும் நிகழ்ச்சிக்கு வரக்கூடிய கட்சி தலைவர்களை வரவேற்று கொடிக்கம்பங்கள், பிளக்ஸ் பேனர் அதிக அளவில் போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்படுகிறது. இவ்வாறு வைக்கப்படும் பிளக்ஸ் பேனர்கள், கொடிக்கம்பங்களால் வாகனங்களில் செல்லக்கூடியவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட்டு விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. போலீசாரும், உள்ளாட்சி அமைப்பினரும் இதை கண்டு கொள்வதே இல்லை, நேற்று சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலைதிருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பரிசு வழங்க வந்த அமைச்சர் பெரியகருப்பனை வரவேற்று கட்சியினர் கொடிகம்பங்களையும், பேனர்களையும் ரோட்டின் இருபுறமும் வைத்திருந்தனர். காலை நேரத்தில் பஸ் ஸ்டாண்டில் இருந்து கலெக்டர் அலுவலகம் செல்லக்கூடிய பேருந்து, வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டன. பொது இடங்கள், ரோட்டோரங்களில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக கொடி கம்பங்கள், பிளக்ஸ் பேனர் வைப்பதை போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி