பட்டமங்கலம் அழகு சவுந்தரி கோயில் பங்குனி விழா துவக்கம்
திருப்புத்துார்: கல்லல் ஒன்றியம் பட்டமங்கலத்தில் மதியாத கண்ட விநாயகர், அழகு சவுந்தரி அம்மன் கோயிலில் பங்குனித் உத்திரத் திருவிழா காப்புக்கட்டுடன் துவங்கியது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா காப்புக்கட்டுதலை முன்னிட்டு நேற்று காலை 8:00 மணிக்கு கொடிமரம் அருகில் யாகசாலை பூஜைகள் நடந்தது.மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தது. தண்டாயுதபாணி குருக்கள் பூஜைகளை செய்தார். கொடிமரத்திற்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் மதியாத கண்ட விநாயகர், அழகு சுந்தரி அம்பாள் உற்ஸவமூர்த்திகளுக்கு காப்புக்கட்டி, கொடிமரம், சுவாமிக்கும் தீபாராதனை காண்பித்தனர். முதலாம் திருநாளை முன்னிட்டு இரவு கேடயத்தில் அம்பாள் திருவீதி உலா வந்தார். தொடர்ந்து தினமும் காலை அம்பாள் திருவீதி புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெறும். ஏப்.8ல் சூரசம்ஹாரமும், ஏப்.11 மாலையில் தேரோட்டமும், மறுநாள் காலை மஞ்சுவிரட்டு, தீர்த்தம் கொடுத்தலும், இரவில் பூப்பல்லக்கும் நடைபெறும். ஏப்.13 காலையில் காப்புக்களைதல், ஊஞ்சல் திருநாளுடன் விழா நிறைவு பெறுகிறது.