தேவகோட்டை அருகே மயில்கள் வேட்டை * இரு வாலிபர்கள் கைது
தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மயில்களை வேட்டையாடி கொன்ற இரண்டு வாலிபர்களை வனத்துறையினர் கைது செய்தனர்.தேவகோட்டை தாலூகா முப்பையூரில் திருவேகம்பத்துார் எஸ்.ஐ., சந்தனக்கருப்பு மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது இரு வாலிபர்கள் டூவீலரில் ஒரு மூடையுடன் சென்றனர். போலீசாரை கண்டதும் மூடையை ரோட்டில் போட்டு விட்டு அவர்கள் தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை விரட்டி பிடித்து விசாரித்தனர். மேலும் மூடையை போலீசார் பிரித்த போது மயில்களை வேட்டையாடி எடுத்து சென்றது தெரிந்தது. இருவரையும் போலீசார் வன அலுவலர்கள் பிரபா, பார்த்திபன் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.வனத்துறையினரின் விசாரணையில் இருவரும் சிவகங்கை அருகே கோமாளிப்பட்டியைச் சேர்ந்த ஏலப்பன் மகன் ரஞ்சித்குமார் 33, முனியசாமி மகன் அழகர்சாமி 22, என தெரியவந்தது. முப்பையூர் காட்டுப்பகுதியில் 7 ஆண், 2 பெண் மயில்களை வேட்டையாடி கொன்று எடுத்து சென்றதும் தெரியவந்தது. மயில்களை கால்நடை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்த பின் வனப்பகுதியில் வனத்துறையினர் எரித்து புதைத்தனர். ரஞ்சித் குமார், அழகர்சாமியை வனத்துறை அதிகாரிகள் தேவகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். டூவீலர் பறிமுதல் செய்யப்பட்டது.