தலைக்கு மேல் காத்திருக்கும் ஆபத்து நிழற்குடையால் மக்கள் அச்சம்
காரைக்குடி: சாக்கோட்டை அருகே சேதமடைந்த பயணிகள் நிழற்குடையால் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகொட்டகுடி ஊராட்சியில், நென்மேனி, தச்சகுடி, சின்ன கொட்ட குடி, உட்பட 8 சிற்றுார்கள் உள்ளன. தேவகோட்டை புதுவயல் சாலையில் அமைந்துள்ள பெரிய கொட்டகுடியில் பயணிகள் நிழற்குடை உள்ளது. கிராம மக்கள் புதுவயல் காரைக்குடி தேவகோட்டை சென்று வருகின்றனர்.இங்குள்ள பயணிகள் நிழற்குடை பல மாதங்களாக சேதமடைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு நிழற்குடையின் மேற்பகுதி உடைந்து விழுந்தது. பயணிகள் யாரும் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். கடும் வெயில் காரணமாக பயணிகள் வேறு வழியின்றி பயணிகள் நிழற்குடையில் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். விபத்து ஏற்படும் முன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.