உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கோவானுார் கிராமத்திற்கு பஸ் விட மக்கள் கோரிக்கை

கோவானுார் கிராமத்திற்கு பஸ் விட மக்கள் கோரிக்கை

சிவகங்கை : சிவகங்கை அருகே கோவானுார் கிராமத்தில் சித்தலுார் ஊராட்சிக்கான கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டம் எம்.எல்.ஏ., செந்தில்நாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை அலுவலர் ஜெயகணேஷ், ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி பங்கேற்றனர். கோவானுார் கிராம மக்கள் கூறுகையில் ,தங்கள் பகுதிக்கு காலை மாலை நேரத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் பயன் அடையும் வண்ணம் சிவகங்கையில் இருந்து அரசு பஸ் இயக்க வேண்டும். குடி தண்ணீர் தினசரி கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். வரத்துக்கால்வாயை துார்வார வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் 10 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கின்றனர். குறைந்தது 50 நாட்களாவது வேலை கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். சித்தலுார் கிராம மக்கள் பேசுகையில், கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடம் மிகவும் சேதம் அடைந்து இடியும் தருவாயில் உள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு புதிய கட்டடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உயர்நிலைப்பள்ளி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். எம்.எல்.ஏ., செந்தில்நாதன் பேசுகையில், சிவகங்கையில் இருந்து காலை மாலை நேரத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடி தண்ணீர் தினசரி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ