மக்கள் தவிப்பு: மூடப்பட்ட வாரச்சந்தைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வொன்றியத்தில் எஸ்.புதுார், புழுதிபட்டி, உலகம்பட்டி கிராமங்களில் வாரச்சந்தைகள் செயல்பட்டு வந்த நிலையில் கொரோனா தடைக் காலத்தில் அனைத்தும் மூடப்பட்டன.தடை நீங்கி அனைத்து ஊர்களிலும் வாரச்சந்தைகள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், எஸ்.புதுார், புழுதிபட்டி கிராமங்களில் திறக்கப்படவில்லை. உலகம்பட்டியில் மட்டும் செவ்வாய், சனிக்கிழமை சந்தை நடைபெறுகிறது. இதனால் மற்ற பகுதி மக்கள் காய்கறி வாங்க திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி, சிங்கம்புணரி ஆகிய ஊர்களுக்கு வந்து செல்ல வேண்டியது உள்ளது. இதனால் அவர்களுக்கு கால விரயமும், கூடுதல் செலவும் ஏற்படுகிறது.இப்பகுதி கிராமங்களில் பல்வேறு காய்கறிகள் விளைந்தாலும், ஒரே இடத்தில் அனைத்தும் பொது மக்களுக்கு கிடைப்பதில்லை.சில கிராமங்களில் குறிப்பிட்ட காய்கறிகளை மட்டுமே தொடர்ச்சியாக வாங்க முடிகிறது. எனவே எஸ்.புதூர், புழுதிபட்டி கிராமங்களில் மூடப்பட்ட வாரச்சந்தைகளை மீண்டும் செயல்படுத்த வேண்டும். இட வசதி இல்லாத பட்சத்தில் அருகேயுள்ள கிராமங்களில் கூடுதல் வசதி, கட்டடங்களுடன் வாரச் சந்தைகளை அமைத்து பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும்.