கூட்டு குடிநீர் திட்டங்களில் குழாய்கள் சேதமடைந்து தினசரி குடிநீர்... வீணாகுது!
திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும் கூட்டு குடிநீர் திட்டங்களில் குழாய்கள் சேதமடைந்து தினசரி குடிநீர் வீணாகி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றுப்படுகையில் இருந்து மதுரை, அருப்புக்கோட்டை, கட்டனூர், உள்ளிட்ட பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன. இதுதவிர வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியுள்ள கிராமங்களிலும் அந்தந்த ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து கிராமங்களுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அருப்புக்கோட்டை, மதுரை கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு வைகை ஆற்றை ஒட்டி குடிநீரை பம்ப்பிங் செய்ய குடிநீரேற்று நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வைகை ஆற்றில் இருந்து 24 மணி நேரமும் தண்ணீர் உறிஞ்சப்பட்டு மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் நிரப்பபட்டு குடிநீர் விநியோகம் தங்கு தடையின்றி விநியோகம் செய்யப்படுகிறது. பராமரிப்பில்லா குடிநீர் குழாய்கள் ஆனால் குடிநீர் விநியோகம் செய்ய அமைக்கப்பட்ட குழாய்கள் முறையான பராமரிப்பு இன்றி அடிக்கடி சேதமடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இது குறித்து புகார் தெரிவித்தாலும் அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை. மழை காலம் தொடங்க உள்ள நிலையில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் கூட குறையவில்லை. இதனால் குடிநீரின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஆனால் அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக வைகை ஆற்றில் இருந்து உறிஞ்சப்படும் தண்ணீர் வழியிலேயே வீணாகி வருகிறது. இதனால் தண்ணீர் உறிஞ்ச, விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் மோட்டார்களுக்கு மின்சாரமும் விரயமாகிறது. மணலூர் வைகை ஆற்றுப் படுகையில் இருந்து மதுரை நகருக்கு செல்லும் குடிநீர் குழாய் பத்து நாட்களுக்கு ஒரு முறை ஒரே இடத்தில் சேதமாகி குடிநீர் வீணாகி வருகிறது. இதே போல திருப்புவனம் நகரினுள் சிவகங்கை செல்லும் ரோட்டில் பல மாதங்களாக மேலாக குடிநீர் குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. அருகில் உள்ள வாடகை டாக்ஸி, வேன் ஸ்டாண்டுகளில் வாகனங்களை நிறுத்தவே முடியவில்லை. குழாய் சேதமடைந்து தண்ணீர் குளம் போல தேங்கி நிற்பதுடன் கனரக வாகனங்கள் செல்லும் போது தண்ணீர் சாலைகளில் நடந்தும் டூவீலர்களில் செல்பவர்கள் மீதும் தெறித்து வருகிறது. எனவே குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் குழாய்கள் சேதமடைந்தால் உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியள்ளனர்.