நகரில் பல்லாங்குழியான சாலைகள்
சிவகங்கை: சிவகங்கை நகரில் பல இடங்களில் ரோடு குண்டும், குழியுமாக காணப்பட்டாலும் அதை விடுத்து நன்றாக இருக்கும் ரோட்டையே நகராட்சியினர் மீண்டும் மீண்டும் சீரமைப்பு பணி மேற்கொள்கின்றனர். சிவகங்கை தொண்டி ரோட்டில் அரண்மனை பகுதியில் சண்முகராஜா கலை அரங்கம் முன் சாலை முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் மேம்பாலத்தின் மேல் பகுதியில் ஆங்காங்கே ரோடு பேட்ஜ் ஒர்க் நடந்தாலும் ஆங்காங்கே சிறு சிறு பள்ளங்கள் உருவாகிறது. கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் புதுார் ரோடு முழுவதும் சேதம் அடைந்துள்ளது. மேம்பாலத்தில் இருந்து 48 காலனி வழியாக ஆயுதப்படை குடியிருப்பு செல்லும் ரோடு சேதம், பஸ் ஸ்டாண்ட் பின்புறம் வழியாக போஸ்ரோட்டில் இருந்து மஜித்ரோடு இணைப்பு சாலை, சிவன் கோவிலில் இருந்து உழவர் சந்தை வழியாக உள்ள இணைப்பு சாலை பள்ளங்களாகவே காட்சி அளிக்கிறது. ஆனால் குழிகளாக ரோட்டை சீரமைக்காமல் நன்றாக இருக்கும் கலெக்டர் அலுவலக ரோடு மட்டும் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கும் பணியை நகராட்சி மேற்கொள்கிறது.