அங்கன்வாடி மையங்களில் சத்துமாவு பெற முடியாமல் கர்ப்பிணிகள் தவிப்பு
காரைக்குடி: காரைக்குடி அங்கன்வாடி மையங்களில் முகப்பதிவு முறையில் கர்ப்பிணிகள் மற்றும் குழந்தை பெற்ற பெண்கள் சத்துமாவு பெறுவது சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கிட கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் சத்துமாவு பாக்கெட் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு 150 கிராம் வீதம் 25 நாட்களுக்கான பாக்கெட்கள் ஒரே நாளில் வழங்கப்படுகிறது. சத்துமாவு பெற, அந்தந்த அங்கன்வாடி மையங்களில், மத்திய அரசின் போஷன் டிராக்கர் செயலி மூலம் முகப்பதிவு செய்யப்படுகிறது. மாதந்தோறும் முகப்பதிவு செய்த பின்னரே சத்துமாவு வழங்கப்படுகிறது. இதில், பல்வேறு சிக்கல் நிலவி வருகிறது. வளைகாப்பு முடிந்து வெளியூர் சென்ற நிறைமாத கர்ப்பிணிகள் அங்கன்வாடி மையங்களுக்கு செல்வது சிரமமாக உள்ளது. அதேபோல், குழந்தை பிறந்த பின்பு சிசேரியன் செய்த தாய்மார்கள் அங்கன்வாடி செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். இதனை தடுக்கும் பொருட்டு மாற்று வழி முறைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில்: கர்ப்பிணியாக இருந்த போது காரைக்குடியிலுள்ள அங்கன்வாடி மையத்தில் சத்து மாவு வாங்கினேன். வளைகாப்பிற்குப் பின்பு 18 கிலோ மீட்டர் துாரமுள்ள வெளியூர் சென்று விட்டேன். ஆனாலும் ஒவ்வொரு மாதமும் அங்கன்வாடிக்கு நேரில் சென்று முகப்பதிவு செய்து சத்துமாவு வாங்க வேண்டியிருந்தது. ஒரு மாதத்திற்கு சேர்த்து 8 பாக்கெட் தர வேண்டும். ஆனால் 3 பாக்கெட் மட்டுமே தருகின்றனர். கேட்டால் முறையான பதிலும் இல்லை. அங்கன்வாடி பணியாளரை பார்ப்பதே அரிதாக உள்ளது. எப்போது கேட்டாலும் மீட்டிங் சென்றதாக கூறுகின்றனர். ஒவ்வொரு முறையும் வாக்குவாதம் செய்து தான் சத்துமாவு வாங்கிச் செல்ல வேண்டி உள்ளது. தற்போது சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. ஒரு சிலருக்கு, அவர்கள் அனுப்பும் வீடியோ மூலம், முகப்பதிவு செய்து மாவு பாக்கெட் வழங்குகின்றனர். ஆனால் எனக்கு வீடியோ மூலம் வழங்க மறுத்தனர். சிசேரியன் செய்ததால் நேரில் செல்ல முடிவதில்லை. தாய், தந்தையோ அல்லது உறவினர்கள் மூலம் சத்து மாவு பெறுவதற்கு மாற்று வழி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளை எடை பார்க்கும் உபகரணங்களை தூய்மையாக வைக்க வேண்டும். அடிப்படை வசதிகளும் இல்லை. அதிகாரிகள் கூறுகையில்: திட்டம் வெளிப்படைத்தன்மையாக நடைபெறுவதை உறுதிப்படுத்தவும், முறையாக சத்து மாவு வழங்கப்படுவதை கண்காணிக்கவும் எப்.ஆர்.எஸ்., எனும் முகப்பதிவு அவசியமாகிறது. ஒரு சிலருக்கு வீடியோ மூலம் முகப்பதிவு பதியப்படுகிறது. சிலருக்கு வீடியோ மூலம் பதிவதில் டெக்னிக்கல் பிரச்னை உள்ளது. சத்துமாவு முறையாக வழங்குவது குறித்து ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்படும்.