| ADDED : நவ 27, 2025 06:59 AM
மானாமதுரை: இடைக்காட்டூரில் கார்த்திகைக்காக கலைநயமிக்க ரெடிமேட் மெழுகிலான விளக்குகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. வரும் டிச. 3ம் தேதி திருக்கார்த்திகை நாளன்று வீடுகள் மற்றும் கோயில்கள், வணிக நிறுவனங்கள் தோறும் விளக்குகள் ஏற்றி வழிபடுவர். ஏராளமானோர் பாரம்பரிய முறைப்படி மண்ணாலான விளக்குகளில் எண்ணெய் ஊற்றி திரி வைத்து விளக்குகளை ஏற்றி வைப்பர். இன்றைய நவநாகரீகத்தில் ரெடிமேடாக மெழுகு விளக்குகள் அதிகளவில் வந்துள்ளன. மானாமதுரை அருகே உள்ள இடைக்காட்டூரில் கலைநயத்தோடு மிகவும் அழகாகவும், தரமாகவும் மெழுகால் கார்த்திகை விளக்குகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஐயப்ப சன்னிதானம், கற்பக விருட்சம், அன்ன தீபம், மயில் தீபம், பூர்ண கும்ப தீபம், 3 முக விநாயகர் தீபம், லட்சுமிபாதம், சங்குமுக விநாயகர் தீபம், அண்ணாமலையார் தீபம், லட்சுமி தீபம், குபேர தீபம், அகல் விளக்குகள் என பல்வேறு வடிவங்களில் விளக்குகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த விளக்குகள் ரூ.15லிருந்து ரூ.800 வரை டிசைன்களுக்கேற்ப விற்பனை செய்து வருகின்றனர். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிவக்குமார் கூறுகையில், நாங்கள் வருடந்தோறும் திருக்கார்த்திகை விழாவிற்காக மெழுகிலான கார்த்திகை விளக்குகளை தயார் செய்து மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகிறோம். மேலும் ஒவ்வொரு வருடமும் திருக்கார்த்திகை விழாவிற்காக புதுப்புது டிசைன்களை உருவாக்கி அதனை விற்பனைக்கு அனுப்பி வருகிறோம் என்றார்.