உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை, திருப்புத்துார், தேவகோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம், கரைப்பு

மானாமதுரை, திருப்புத்துார், தேவகோட்டையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம், கரைப்பு

மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு இடங்களில் வைக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. மானாமதுரையில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பழைய தபால் ஆபீஸ் தெரு மாரியம்மன் கோயில் தெரு ரயில்வே காலனி பெருமாள் கோயில் தெரு, ராம் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், சுற்றுப்புற கிராமங்களிலும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. ஹிந்து முன்னணி, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் மூலமாகவும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. நேற்று காலை முதல் சிலைகளை வாகனங்களில் ஏற்றி முக்கிய வீதிகளின் வழியே ஊர்வலமாக கொண்டு சென்று மானாமதுரை, தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்தில் கரைத்தனர். இதேபோன்று இளையான்குடியில் பகைவரைவென்றான், வாணி, மருதங்க நல்லுார் உள்ளிட்ட கிராமங்களிலும் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த சிலைகளை நீர் நிலைகளில் கரைத்தனர். டேங்கரில் வந்த தண்ணீர் மானாமதுரையில் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வைக்கப்பட்ட சிலைகள் அலங்கார குளத்தில் கரைக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.ஆனால் இந்த குளத்தில் தண்ணீர் இல்லாததால் கரைப்பதில் சிரமம் ஏற்பட்டது. நேற்று அதிகாலை முதல் மாவட்ட நிர்வாகம் சார்பில் டேங்கர்களில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு ஊற்றப்பட்டதை தொடர்ந்து விநாயகர் சிலைகள் அங்கு கரைத்தனர். தேவகோட்டை தேவகோட்டை நகர், அருகில் 14 இடங்களில் பா.ஜ., ஹிந்து முன்னணி உட்பட பல அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்தனர். நேற்று மாலை அனைத்து சிலைகளும் சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயில் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, ஊர்வலமாக கருதாவூரணிக்கு கொண்டு செல்லப்பட்டு கரைக்கப்பட்டது. பா.ஜ. மாவட்ட தலைவர் பாண்டித்துரை, நகர பொறுப்பாளர் காசிராஜா, ஹிந்து முன்னணி நகர தலைவர் சுரேஷ் பங்கேற்றனர். திருப்புத்துார் திருப்புத்துாரில் ஹிந்து முன்னணி, பா.ஜ., ஹிந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலம் நடந்தது. நேற்று மதியம் 3:00 மணிக்கு நகரின் பல பகுதிகளில் வைக்கப்பட்ட சிலைகள் வாகனங்களில் சீரணி அரங்கிற்கு கொண்டு வரப்பட்டது. பா.ஜ.,தெற்கு ஒன்றியத் தலைவர் தங்கபாண்டி வரவேற்றார். முன்னாள் மாவட்டச் செயலாளர் சேது சிவராமன் தலைமை வகித்தார். ஹிந்து முன்னணி மாநில செயலாளர் அஸ்வத்தாமன், மாநில செயலாளர் சரவணன், ஆ.பி.சீ.அ.கல்லூரி துணைத் தலைவர் நா.ராமேஸ்வரன் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் கோகிலாராணி நாராயணன் துவக்கி வைத்தார். 20க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் சங்கிலியான் ஊரணியில் கரைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை