உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள் தீர்வுக்கு 60 நாள் அவகாசம் வருவாய்த்துறை உத்தரவு

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள் தீர்வுக்கு 60 நாள் அவகாசம் வருவாய்த்துறை உத்தரவு

சிவகங்கை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது தீர்வு காணும் நாட்களை 45ல் இருந்து 60 நாட்களாக உயர்த்தி தமிழக வருவாய்த்துறை உத்தரவிட்டது. தமிழகத்தில் நகர், கிராமப்புறங்களில் 10,000 இடங்களில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் வீடு தோறும் அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதாகும். இம்முகாமில் மக்கள், அலுவலர்களுக்கு அடிப்படை வசதி, அலுவலர், தன்னார்வலருக்கு உணவு வசதி செய்ய முகாமிற்கு ரூ.25,000 வரை ஒதுக்கப்படுகிறது. முகாம்களில் மகளிர் உரிமை தொகை கோரி தான் அதிகளவில் மனுக்கள் வருகின்றன. மகளிர் உரிமை தொகை மனுக்களை பெற கூடுதலாக அரங்கு அமைத்து, அவற்றை கம்ப்யூட்டரில் பதிவேற்றம் செய்ய கூடுதல் கம்ப்யூட்டர், பிரிண்டர்களை பொருத்த வேண்டும். முகாமில் பெற்ற மனுக்களுக்கு 45 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதற்கு தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் (பெரா) கூட்டமைப்பினரிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து உட்பிரிவு பட்டா மாறுதல், வாரிசு, ஜாதி சான்று, ஆதிதிராவிடர், பிற்பட்ட, மிகவும் பிற்பட்டோருக்கு தேசிய, கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க கோரும் மனுக்கள் மீது தீர்வு காண்பதற்கான கால அவகாசம் 60 நாட்கள் என நீட்டிக்கப்பட்டுள்ளது. இம்முகாம்களில் கூடுதல் செலவினத்திற்காக ஒவ்வொரு முகாமிற்கும் தலா ரூ.5,000 வீதம் அந்தந்த கலெக்டர்கள் தாசில்தார்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !