கோரிக்கையை நிறைவேற்றாவிடில் போராட்டம் தீவிரமாகும் வருவாய்த்துறை அலுவலர் சங்கம் எச்சரிக்கை
சிவகங்கை: ''மாநிலத்தில் வருவாய்த்துறையில் காலியான 3,000 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட 8 அம்ச கோரிக்கைகள் மீது அரசு நடவடிக்கை எடுக்காவிடில் போராட்டம் தீவிரமாகும்,'' என, சிவகங்கையில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் தமிழரசன் தெரிவித்தார்.அவர் மேலும் கூறியதாவது: அலுவலக உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதால் மழை வெள்ள நிவாரணம், தமிழக அரசின் சிறப்பு திட்ட பணிகளை மேற்கொள்வது கடினம். அதே போன்று இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் டைப்பிஸ்ட் இடையேயான பணி முதுநிலை தொடர்பாக அரசு தெளிவுரையை வழங்க வேண்டும். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை 25 சதவீதமாக உயர்த்த வேண்டும்.மண்டல துணை தாசில்தார்களின் பட்டா மாறுதல் அதிகாரத்தை பறிக்க கூடாது. இதுபோன்ற 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் அந்தந்த தாலுகா, கலெக்டர் அலுவலகங்கள் முன் காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அரசு அறிவிப்பு வெளியிடாவிடில் போராட்டத்தை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.