திருப்புவனத்தில் ரோடு அளவீடு; நவம்பரில் நான்கு வழிச்சாலை பணி
திருப்புவனம்; திருப்புவனத்தில் நான்கு வழிச்சாலை பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு அளவீடு பணி தொடங்கியுள்ளன. திருப்புவனத்தில் நாளுக்கு நாள் வாகன அதிகரிப்பு காரணமாக போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. நெரிசலை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோடு அகலப்படுத்தும் பணி நடைபெற உள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமாக சாலைகள் இருந்தாலும் ஆக்கிரமிப்பு காரணமாக ரோடு சுருங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல ஆண்டுகளாக திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாகவே இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடு கொண்டு வந்தாலும் நிரந்தர தீர்வு காண முடியவில்லை. நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமாக நகர்ப்பகுதியில் உள்ள சாலைகளின் அகலம் குறித்து நேற்று முதல் அளவீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது. திருப்புவனம் மருதமரம் தொடங்கி டி.பாப்பாங்குளம் விலக்கு வரை நான்கு கி.மீ., தூரத்திற்கு 40 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டம் தீட்டி அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியுள்ளது. நெடுஞ்சாலைத்துறை சாலைகள் போக மீதியுள்ள தனியார் இடங்களையும் கையகப்படுத்தி நகரினுள் நான்கு வழிச்சாலை அமைய உள்ளது. இந்தாண்டு நவம்பரில் பணிகள் தொடங்க உள்ளன. நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில் : மாவட்டத்தின் மற்ற பகுதிகளை விட திருப்புவனத்தில் தான் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட எந்த வாகனமும் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. ஆக்ரமிப்புகளை அகற்றினாலும் தீர்வு காண முடியவில்லை. எனவே நான்கு வழிச்சாலை அமைத்து தீர்வு காண அரசுக்கு திட்ட மதிப்பீடு செய்து அனுப்பப்பட்டுள்ளது. ரோடு அளவீடு பணிகள் ஒரு வாரத்தில் நிறைவடையும், தேவையான நிலம் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு நவம்பர் அல்லது 2026ல் பணிகள் தொடங்கும், என்றனர்.