அரசனுார் சிப்காட்டில் அடிப்படை வசதிக்கு ரூ.23.65 கோடி ஒதுக்கீடு தினமலர் செய்தி எதிரொலியால் துரிதம்
சிவகங்கை: சிவகங்கை அருகே அரசனுார் சிப்காட் வளாகத்தில் ரூ.23.65 கோடியில் தார்ரோடு, சிறுபாலம், மழை நீர் கால்வாய் அமைக்க தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது.சிவகங்கை மாவட்டம் அரசனுார், இலுப்பக்குடி, கிளாதிரி கிராமங்களில் 1,451 ஏக்கரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகம் செய்தனர்.அதற்கு பின் இத்திட்டத்தை கிடப்பில் போட்டனர். 2021 தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் சட்டசபையில் அரசனுாரில் சிப்காட் தொழிற்பேட்டை துவக்கப்படும் என அறிவித்தனர். இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக ரூ.342 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் கமிஷன் அனுமதிக்கு விண்ணப்பித்து, அவர்கள் ஆய்வு செய்த நிலையில், சுற்றுச்சூழல் அனுமதியும் அரசுக்கு கிடைத்து விட்டது.முதற்கட்டமாக 775 ஏக்கரில் அரசனுாரில் 108.40 ஏக்கர், இலுப்பைக்குடியில் 605.39, கிளாதிரியில் 62 ஏக்கர் வீதம் எடுத்து சிப்காட் தொழிற்பேட்டை துவக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தொடர்ந்து அரசனுாரில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதில் தொய்வு ஏற்பட்டு விடாமல் இருக்க, ஜன., 22 ல் சிவகங்கை வந்த முதல்வர் ஸ்டாலின் கவனத்திற்கு 'தினமலரில்' கட்டுரை வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக அரசனுார் சிப்காட் தொழிற்பேட்டையை விரைந்து துவக்குவதற்கான பூர்வாங்க பணிகளை தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் துவக்கியுள்ளது. அடிப்படை வசதிக்கு ரூ.23.65 கோடி
சிப்காட் வளாகத்தில் ரூ.23.65 கோடியில் தார்ரோடு, சிறுபாலங்கள், மழைநீர் கால்வாய் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். இதற்கான டெண்டர் கோரும் பணியை இந்நிறுவனம் துவக்கியுள்ளது.சிப்காட் தொழிற்பேட்டையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி, துவக்கப்படும் பட்சத்தில் இங்கு ஆட்டோ மொபைல் மற்றும் ஜவுளி உற்பத்தி துவங்கினால், 36 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை சிவகங்கை மாவட்ட மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.