உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3.96 கோடி ஊக்கத்தொகை; தினமலர் செய்தி எதிரொலி  

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.3.96 கோடி ஊக்கத்தொகை; தினமலர் செய்தி எதிரொலி  

சிவகங்கை : தினமலர் செய்தி எதிரொலியால் மாநில அரசு வழங்கும் கரும்புக்கான ஊக்கத்தொகை சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பொங்கலுக்கு முன்பே வழங்கப்பட்டுள்ளது.சிவகங்கை அருகே படமாத்துாரில் உள்ள சர்க்கரை ஆலைக்கு சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் அரவைக்காக ஆண்டுதோறும் கரும்பு வழங்குகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 3 லட்சம் டன் வரை கரும்பு அரவைக்கு வழங்குகின்றனர். இவர்களுக்கு மாநில அரசின் ஊக்கத்தொகையாக டன்னுக்கு ரூ.195 வரை அறிவிக்கப்பட்டது. ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கரும்பு விவசாயிகள் குறித்த பட்டியல், சர்க்கரை துறை கமிஷனருக்கு அனுப்புவதில், காலதாமதம் ஏற்பட்டது. இதனால், மற்ற அனைத்து மாவட்ட விவசாயிகளுக்கும் அரசின் ஊக்கத்தொகை கிடைக்காமல் தாமதம் ஆனது. இது குறித்து கடந்த மாத விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கரும்பு விவசாயிகள் சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித்திடம் வலியுறுத்தினர். பொங்கல் பண்டிகைக்கு முன் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

ஊக்கத்தொகை ரூ.3.96 கோடி ஒதுக்கீடு

தினமலரில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சிவகங்கை மாவட்ட கலெக்டரின் முயற்சியால், இம்மாவட்டத்தை சேர்ந்த 2,668 விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195 வீதம் 2 லட்சத்து 3 ஆயிரத்து 118 டன் கரும்புக்கான ஊக்கத்தொகை ரூ.3 கோடியே 96 லட்சத்து 8 ஆயிரத்து 115யை அந்தந்த விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வைத்த கோரிக்கைபடி பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே சிவகங்கை மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை கிடைத்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ