சமத்துவபுரத்தில் புதிய வீடு வாங்கி தருவதாக ரூ.6 லட்சம் மோசடி
சிவகங்கை: தேவகோட்டை அருகே கடம்பகுடி சமத்துவபுரத்தில் கட்டிய வீடு காலியாக இருப்பதாக கூறி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் எனக்கூறி பெண்களிடம் ரூ.6 லட்சம் பெற்று மோசடி நடந்துள்ளது தெரியவந்துள்ளது. தேவகோட்டை அருகே கடம்பகுடியில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு புதிதாக கட்டிய வீடுகள் காலியாக இருப்பதாகவும், அந்த வீடுகளை சிவகங்கை கலெக்டரின் நேர்முக உதவியாளர் மூலம் பெற்றுத்தருவதாக ஆட்டோ டிரைவர் ஒருவர் அப்பகுதி பெண்களிடம் கூறியுள்ளார். இதை நம்பி ஆட்டோ டிரைவர் மூலம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் எனக்கூறி ஒருவர் அறிமுகம் ஆனார். இருவரும் அப்பெண்களிடம் புதிதாக கட்டிய வீட்டின் சாவியை கலெக்டர் மூலம் எளிதில் பெற்றுத்தருவதாக நம்பிக்கை கொடுத்துள்ளனர். இதை நம்பி தேவகோட்டை அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட பெண்கள் தலா ரூ.60 ஆயிரம் வீதம் ரூ.6 லட்சம் வரை ஆட்டோ டிரைவர் மூலம் கொடுத்துள்ளனர். பணம் பெற்ற பெண்களிடம், கடந்த 3 நாட்களாக சிவகங்கை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தால், கலெக்டரிடம் நேரடியாக வீட்டு சாவி, பத்திரங்களை வாங்கி தருவதாக கூறியுள்ளனர். இதை நம்பிய பெண்கள் கடந்த 3 நாட்களாக சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்து, ஏமாற்றம் அடைந்துள்ளனர். அவர்களின் அலைபேசிக்கு தொடர்பு கொண்டபோது, சுவிட்ச் ஆப் செய்து தலைமறைவாகினர். ரூ.6 லட்சம் வரை பெற்று மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து சிவகங்கை கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தனர்.