சிவகங்கையில் காலாவதியான உணவு விற்பனை: அதிகாரிகள் கண்காணிப்பில்... தொய்வு
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கண்காணிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.கடைகளில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் பெட்டி கடைகள், உணவகங்கள் சிலவற்றில் காலாவதியான உணவுப் பொருட்கள், கலப்பட உணவுப் பொருட்கள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. மசாலா கலந்து தயாராகும் பொருட்கள், பாக்கெட் தின்பண்டங்கள் போன்றவை பல மாதங்களாக விற்பனையாகாமல் ஸ்டாக் வைத்து காலாவதியான பொருட்களை சில கடை வியாபாரிகள் விற்று வருகின்றனர். குறிப்பாக கிராமப்புறத்தில் உள்ள கடை உரிமையாளர்களின் அறியாமை காரணமாக இது நடக்கிறது. பொருட்கள் வாங்கும் சிலர் அந்த பாக்கெட்களில் உள்ள காலாவதி தேதியை கண்டுபிடித்து கடை உரிமையாளர்களிடம் மொத்த விற்பனையாளர்களை கண்டிக்க சொல்கின்றனர். காலாவதி தேதியை பார்க்க தெரியாதவர்கள் தங்களின் அறியாமையால் வாங்கி உணவு பொருட்களை பயன்படுத்துகின்றனர்.உணவு பொருட்கள் தயாரிக்கும் பெரும்பாலானநிறுவனங்கள் உணவு பொருட்களின் நிறுவன பெயர் விலாசம் உள்ளிட்ட வற்றை பெரிதாக காட்டி விட்டு தயாரிப்பு தேதி காலாவதி தேதி உள்ளிட்டவைகளை கண்ணுக்கு தெரியாத வகையில் சிறியதாக அச்சிடுகின்றனர். அதே போல் சில உணவகங்கள் உண்ணும் உணவுப் பொருட்களில் அதிகமான நிறமிகளை பயன்படுத்துகின்றனர். துரித உணவகங்களில் விற்பனையாகாத உணவுகளை பல நாட்கள் பிரிஜ்களில் வைத்து விற்பனை செய்கின்றனர். இவற்றை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தொய்வின்றி ஆய்வு பணியில் ஈடுபட வேண்டும். அதிகாரிகளிடம் கேட்டாலும் எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என கூறி விடுகின்றனர். ஒரு சில இடங்களில் சோதனைக்கு சென்று காலாவதியான பொருட்கள்விற்பதை கண்டுபிடித்தாலும் எச்சரித்து மட்டும்விடுவதால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல் மக்கள் பாதிக்கப்படுவது தொடர்கிறது.