உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓராண்டாக மூடப்பட்டுள்ள சர்வோதயா கடைகள்

ஓராண்டாக மூடப்பட்டுள்ள சர்வோதயா கடைகள்

காரைக்குடி : சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக செயல்படாமல் மூடிக் கிடக்கும் சர்வோதயா சங்க கடைகளால், பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு தொழிலாளர்களும் வேலையை இழந்து சிரமப்படுகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் தேவகோட்டை ரஸ்தாவை தலைமையிடமாகக் கொண்டு சர்வோதயா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் சிவகங்கை, காரைக்குடி, பள்ளத்துார், தேவகோட்டை, மானாமதுரை உட்பட 9 இடங்களில் கடைகள் உள்ளன. இக்கடைகளில் பொறுப்பாளர்களை நியமிப்பது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னையால் 13 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.சர்வோதயா சங்க செயலாளர் ஜோதி தலைமையில், பொறுப்பாளர்கள் நிர்வகித்து வந்த நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதனால் ஓராண்டுக்கும் மேலாக கடைகள் திறக்கப்படவில்லை. சிவகங்கை, திருப்புத்துார் மற்றும் தேவகோட்டை ரஸ்தா ஆகிய 3 கடைகள் மட்டுமே இயங்கி வருகிறது. ஓராண்டாக பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக ஏ.ஐ.டி.யு.சி., தொழிற்சங்கத்தினர் முற்றுகைப் போராட்டம் அறிவித்தனர்.தாலுகா அலுவலகத்தில் சமாதான கூட்டம் நடந்தது. தாசில்தார் ராஜா, சர்வோதயா சங்க நிர்வாகிகள், தேர்தல் நடத்தி சங்க நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும், மூடிக் கிடக்கும் கடைகளை திறக்க வேண்டும் என உத்தரவிட்டார். பணிநீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் கடையை திறந்து விற்பனை செய்தனர். இதனைக் கண்டித்து, நிர்வாகிகள் சிலர் கடையை திறக்கக் கூடாது என கடைக்கு முன்பு கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும் எனக் கூறி தாசில்தார் ராஜா மீண்டும் கடையை தற்காலிகமாக அடைப்பதற்கு உத்தரவிட்டார்.சர்வோதயா சங்க செயலாளர் ஜோதி கூறுகையில்: நிர்வாகிகள் சிலர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகும் அவர்கள் பணிபுரிந்த கிளைகளின் சாவியை ஒப்படைக்காமல் சட்டவிரோதமாக திறந்து வியாபாரம் செய்தனர். மேலும் போலி வவுச்சர் தயார் செய்து கையாடல் செய்துள்ளனர். தவிர கிளைகளை மூடிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தலைமை அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆவணங்களை எடுத்துச் சென்றனர். இதனால், சங்கத்திற்கு ரூ.10 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான வழக்கு மதுரை உயர் நீதிமன்றத்திலும் காரைக்குடி நீதிமன்றத்திலும் நடந்து வருகிறது.சர்வோதயா சங்க முன்னாள் தலைவர் அழகப்பன் கூறுகையில்: புதிய சங்க செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாதத்தில் ஊழியர்கள் பழி வாங்கப்பட்டனர். சங்கச் செயலாளர் பதவி, முறையாக பதிவு செய்யப்படவில்லை. எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நோட்டீஸ் கொடுக்காமல், செய்தித்தாளிலேயே ஊழியர்களை பணி நீக்கம் செய்தனர். புதிய செயலாளர் பதவி ஏற்றதில் இருந்து சம்பளம், போனஸ் எதுவும் போடவில்லை. புதிய செயலாளர் தேர்ந்தெடுத்தது செல்லாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். இப்பிரச்னையால் நூற்போர், நெய்வோர் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். உற்பத்தி பொருட்களும் தேக்கமடைந்து வீணாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை