தேவகோட்டை அருகே பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் காயம்
தேவகோட்டை : தேவகோட்டை அருகே பள்ளி கான்க்ரீட் கூரை இடிந்து விழுந்ததில் இரு மாணவிகள் காய மடைந்தனர் தேவகோட்டை ஒன்றியம் மாவிடுதிக்கோட்டையில் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 40 குழந்தைகள் படிக்கின்றனர். 1946 ல் துவங்கப்பட்ட பள்ளி. 1972 ல் ஒரு ஓட்டு கட்டடம் கட்டி உள்ளனர். 1986 ல் அருகிலேயே கூடுதலாக கான்கிரீட் கூரையுடன் கட்டடம் கட்டினர். இந்த கட்டடத்தில் 2022--23 ல் ரூ.3 லட்சத்தில் மராமத்து பணி மேற்கொண்டுள்ளனர். 72ம் ஆண்டு கட்டப்பட்ட பழைய கட்டடத்தில் ஓடு இன்றும் நன்றாக உள்ளது. ஆனால் புதிய கட்டடத்தில் கான்கிரீட் சேதமடைய துவங்கிய போது பெற்றோர்கள் ஆசிரியைகளிடம் கூறினர். தலைமை ஆசிரியரும் கட்டடத்தின் நிலை குறித்து அதிகாரிகளுக்கு தெரிவித்து உள்ளார். இந்த சூழ்நிலையில் இப்பள்ளிக்கு புதியதாக 10 கம்ப்யூட்டர்கள் வழங்கி உள்ளனர். அதற்கு மின் இணைப்பு, இன்டர்நெட் இணைப்பு கொடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 3:00 மணிக்கு கான்கிரீட் கூரை பெயர்ந்து இடிந்து விழுந்தது. இதில் ஒரு மாணவிக்கு கையிலும், ஒரு மாணவிக்கு காலிலும் காயம் ஏற்பட்டது. ஒரு ஆசிரியைக்கு லேசான காயம் ஏற்பட்டு உள்ளது. இரண்டு புதிய கம்ப்யூட்டர்கள் முழுவதும் சேதமடைந்தன. பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். மருத்துவ விடுப்பில் உள்ள தலைமை ஆசிரியைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நாளை திங்கட்கிழமை பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்ப முடியாது என்று அனைத்து பெற்றோர்களும் தெரிவித்துள்ளனர்.