பசுமை எரிவாயுவுடன் கூடிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
காரைக்குடி: காரைக்குடியில் பல லட்சம் செலவில் கட்டப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பசுமை எரிவாயு நிலையம் பயன்பாடின்றி கிடக்கிறது. காரைக்குடி மாநகராட்சிக்குட்பட்ட முனிசிபாலிட்டி காலனியில் பசுமை எரிவாயுடன் கூடிய சுத்தி கரிப்பு நிலைய திறப்பு விழா கடந்த ஆண்டு நடந்தது. அழகப்பா பல்கலை மற்றும் மெம்ப்பிள் டெக் பிரைவேட் லிமிட்., மற்றும் எச் 2 நெக்ஸ்ட் பிரைவேட் லிமிட்., சார்பில் அமைத்து கொடுக்கப்பட்டுள்ள இந்த சுத்திகரிப்பு நிலையத்திற்கு நகராட்சி சார்பில் இடம் மற்றும் கட்டடம் வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் ரூ.8 லட்சம் சமூக பங்களிப்பு ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நிலையம் கட்டப்பட்டுள்ளது, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரத்து 250 லிட்டர் கழிவுநீரை மறு சுழற்சி செய்து 10 ஆயிரம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை பெறும் நோக்கிலும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்து 26 கிராம் ஹைட்ரஜன் வாயு தயாரித்து அதனை எரிபொருளாக பயன்படுத்தும் நோக்கிலும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்த நிறுவனத்தினர் 3 ஆண்டு பராமரிப்பு பணி மேற்கொள்கின்றனர். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை நகராட்சி மூலம் பொது மக்களுக்கு நிறுவனங்களுக்கும் அல்லது வேறு பயன்பாட்டிற்கோ வழங்கலாம். இதன் மூலம் நகராட்சிக்கும் வருவாய் ஈட்ட முடியும். ஆனால், தினமும் சுத்திகரிக்கப்படும் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரும் நிலையத்தில் உள்ள செடிகளுக்கு பாய்ச்சப்படுகிறது. ஹைட்ரஜன் எரிவாயு வெறும் டெமோவிற்காக வைக்கப்பட்டு உள்ளது. இதனால் பல லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட நிலையம், எவ்வித பயனுமின்றி வீணாகி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கையில், கழிவுநீர் சுத்திகரிப்பு மற்றும் பசுமை எரிவாயு நிலையம் பயன்பாட்டில் இருந்தது. தற்போது இயந்திர கோளாறு காரணமாக பயன்பாடின்றி உள்ளது. இதற்கு நட வடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பராமரிப்பு நிறு வனத்தினர் கூறுகையில், சுத்திகரிப்பு நிலையத்தில் ஆட்கள் நியமிக்கப்பட்டு முறையாக இயங்கி வருகிறது. சுத்திகரிக்கப்படும் 10 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மாநகராட்சி மற்றும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் தற்போது யாரும் பயன்படுத்ததால் செடிகளுக்கு விடப் படுகிறது.