சங்கரபதி கோட்டை புனரமைப்பு பணி எப்போது: அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது
காரைக்குடி : காரைக்குடி அருகேயுள்ள வரலாற்று சிறப்புமிக்க சங்கரபதி கோட்டை புனரமைப்பு பணி அடிக்கல் நாட்டியதோடு நிற்கிறது. எந்தப் பணியும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காரைக்குடி தேவகோட்டை நெடுஞ்சாலை அருகே வனத்துறைக்கு சொந்தமான சங்கரபதி காடு உள்ளது. இங்கு பழமையான சங்கரபதி கோட்டை உள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோட்டையில் மருது சகோதரர்களுக்கு பயிற்சி அளித்ததாகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிடுவதற்கு ராணி வேலுநாச்சியார் மற்றும் ஹைதர் அலி போர்ப்படைகள் இங்கு பயிற்சி பெற்றதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கம்பீரமாக காட்சியளித்த இக்கோட்டையானது முற்றிலும் சிதிலமடைந்து கிடந்தது. வரலாற்றுச் சின்னமான சங்கரபதி கோட்டையை புனரமைப்பு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.பட்ஜெட் கூட்டத்தொடரில் 8 பாரம்பரிய கட்டடங்கள் ரூ.50 கோடி மதிப்பீட்டில் புரைமைக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் கடந்த மார்ச்சில் சங்கரபதி கோட்டையில் ரூ.9.03 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள மறு சீரமைப்பு பணிக்கு அமைச்சர் பெரிய கருப்பன் அடிக்கல் நாட்டினார்.இதுவரை எந்த புனரமைப்பு பணியும் தொடங்கவில்லை.சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: வரலாற்றுச் சிறப்புமிக்க சங்கரபதி கோட்டையை புனரமைக்க வேண்டி பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததன் பேரில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால், பொதுப்பணித்துறை சார்பில் இதுவரை எந்த பணியும் தொடங்கவில்லை. பொதுப்பணித்துறை கட்டட மையம் மற்றும் பாதுகாப்பு கோட்ட அதிகாரிகள் கூறுகையில்:சங்கரபதி கோட்டையில் சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. விலங்குகள் உள்ளே வராதவாறு கட்டடத்தை சுற்றிலும் தடுப்பு போட்டுள்ளோம்.கட்டடத்தின் உள்ளே வளர்ந்திருந்த மரங்களை அகற்றியுள்ளோம். அடுத்த கட்டமாக இடிந்து கீழே கிடக்கும் கற்களை வெளியே எடுத்து விட்டு புதிதாக சுவர் கட்டும் பணி நடைபெறும். கட்டுமானத்திற்கு தேவையான மூலப் பொருட்களும் தற்போது வந்துள்ளது என்றனர்.