திருப்புவனத்தில் விதிமீறும் ஷேர் ஆட்டோக்கள்
திருப்புவனம் : திருப்புவனத்தில் விதி மீறும் ஷேர் ஆட்டோக்களால் தினமும் பொதுமக்கள், அரசு பஸ் டிரைவர்கள் தவிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். திருப்புவனத்தைச் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இக்கிராம மக்கள் தினசரி பொருட்கள் வாங்கவும் வெளியூர் செல்லவும் திருப்புவனம் வந்து செல்கின்றனர். கிராமங்களில் இருந்து குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. மற்ற நேரங்களில் இங்குள்ள 100 க்கும் மேற்பட்ட ஷேர் ஆட்டோக்களை நம்பியே மக்கள் உள்ளனர். சிவகங்கை ரோடு, கோட்டை, நரிக்குடி ரோடு, புதூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து இயங்கும் பெரும்பாலான ஆட்டோக்களில் உரிய ஆவணங்கள், டிரைவிங் லைசென்ஸ் இருப்பதில்லை. பயணிகளை ஏற்றுவதில் சக ஆட்டோ டிரைவர்களுடன் தகராறு செய்வது அரசு டவுன் பஸ்களில் ஏற விடாமல் தடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தினமும் காலை மற்றும் மாலையில் மதுரைக்கு ஷேர் ஆட்டோக்கள் ஏராளமாக இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு அரசு டவுன் பஸ் சிவகங்கை விலக்கில் பயணிகளை ஏற்ற சென்ற போது ஷேர் ஆட்டோவை இடையூறாக ஓட்டியதால் ஆட்டோ, டவுன் பஸ் இரண்டும் சிக்கி கொண்டது. சிறிது நேரம் கழித்து இரு வாகனங்களையும் முன்பின் நகர்த்தி வெளியில் எடுத்தனர். ஷேர் ஆட்டோக்களை அதிவேகத்தில் இயக்குவது, திடீர் திடீரென நடுரோட்டில் நிறுத்துவதால் மற்ற வாகன டிரைவர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதை போக்குவரத்து போலீசார் கண்டு கொள்வதே இல்லை. எனவே மாவட்ட அதிகாரிகள் திருப்புவனத்தில் விதிகளை மீறி ஓடும் ஷேர் ஆட்டோக்களை பறிமுதல் செய்து, டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.