உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஷீல்டு கால்வாய் கட்டுமான பணி தரம்  நடவடிக்கை ! விவசாயிகளுக்கு கலெக்டர் உறுதி

ஷீல்டு கால்வாய் கட்டுமான பணி தரம்  நடவடிக்கை ! விவசாயிகளுக்கு கலெக்டர் உறுதி

சிவகங்கை, ஷீல்டு கால்வாய் பணி தரமின்றி கட்டப்படுவதாக விவசாயிகள் புகாருக்கு அதிகாரிகள் ஆய்வு செய்த பின்பே ஒப்பந்தகாரருக்கு பணம் விடுவிக்கப்படும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். - சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அரவிந்த் முன்னிலை வகித்தனர். வேளாண் இணை இயக்குனர் சுந்தரமகாலிங்கம் வரவேற்றார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், கலெக்டர் பி.ஏ.,(வேளாண்மை) தனலட்சுமி உட்பட அனைத்து துறை அலுவலர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: நாகநாதன், தேவகோட்டை: புளியால் பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அதிகாலை 1:00 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டால் மறுநாள் காலையில் தான் வருகிறது. கோபால், திருப்புவனம்: பனையனேந்தல், உடையனேந்தல் கண்மாயை துார்வார வேண்டும் பல ஆண்டாக மனு கொடுத்து விட்டேன். கண்மாய் துார்வாரப்படவில்லை. ராஜ்குமார், உதவி கோட்ட பொறியாளர், பொதுப்பணித்துறை: இதற்காக ரூ.1.26 லட்சம், ரூ.45 லட்சம் திட்டத்தில் பணிகளை செய்ய அரசின் ஒப்புதலுக்கு கடிதம் எழுதியுள்ளோம். பன்னீர்செல்வம், காளையார்கோவில்: பெரியகிளுவச்சி உட்பட கண்மாய்க்கு நாட்டார் கால்வாயில் இருந்து தண்ணீர் கொண்டு செல்ல கால்வாயை சீரமைக்க வேண்டும். பாரத்ராஜா, திருப்புவனம்: அரசு அலுவலகங்களில் இருந்து விவசாயிகளுக்கு அனுப்பப்படும் பதில் மனுக்களில், மத்திய அரசு நிதி என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்றே குறிப்பிடுகின்றனர். இதை கண்டிக்கிறேன். அரசியல் கட்சிகள் தான் அப்படி குறிப்பிடுகின்றனர். ஆனால், அதிகாரிகள் மத்திய அரசு என்று தான் குறிப்பிட்டு கடிதம் எழுத வேண்டும். நாகநாதன், தேவகோட்டை: நெல் அறுவடையின் போது நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். காலதாமதமாக துவக்குவதால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு நெல்லை வாங்கி செல்கின்றனர். வீரபாண்டியன், மானாமதுரை: நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் கூடுதலாக பணம் வசூலிக்காமல் இருக்க, லோடுமேன்களுக்கு ஒரு மூடைக்கு ரூ.20 வீதம் சம்பளம் தர வேண்டும். மண்டல மேலாளர் (நுகர்பொருள் வாணிப கழகம்) நதர்ஷா: கடந்த ஆண்டு 88 கொள்முதல் நிலையம் அமைத்து 65,100 டன் நெல் கொள்முதல் செய்துள்ளோம். லோடுமேன்கள் நெல்லை துாற்றி மூடையில் அடுக்குவதோடு, லாரியில் ஏற்றும் வரை மூடைக்கு ரூ.10 மட்டும் தான் தரப்படுகிறது. அய்யாச்சாமி, இளையான்குடி: நெல் கொள்முதல் நிலையங்களுக்கு பிற மாவட்ட விவசாயிகள் நெல் கொண்டு வர, வி.ஏ.ஓ.,க்கள் அடங்கல் வழங்க கூடாது. முத்துராமலிங்கம், வேம்பங்குடி: இங்கு விதிமீறி கிராவல் மண் எடுப்பது குறித்து பல முறை புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. கனிம வளத்துறை அதிகாரி: 'ட்ரோன்' மூலம் ஆய்வு செய்ததில் விதிமீறி எடுக்கப்பட்ட கிராவல் மண்ணுக்கு அபராதம் விதிக்க சிவகங்கை கோட்டாட்சியருக்கு பரிந்துரை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. கருணாநிதி, காளையார்கோவில்: காளையார்கோவில் - தொண்டி ரோடு சந்திப்பில் இருந்து மோர்குழி - நடராஜபுரம் வரை சேதமான தார் ரோட்டை புதுப்பிக்க, வனத்துறை தடையின்மை சான்று அளித்தும் பணி கிடப்பில் உள்ளது. கலெக்டர்: எந்த ரோடு போடவேண்டும் என்றாலும் வனத்துறை இடத்திற்குள் சென்றால், அவர்களது தடையின்மை சான்று அவசியம். தடையின்மை சான்று கிடைக்க காலதாமதம் ஆகத்தான் செய்யும். அதுவரை ரோடு பணி செய்ய முடியாது. சிரஞ்சீவி, மானாமதுரை: எம்.கரிசல்குளம் கண்மாய் வைகை ஆற்றை ஒட்டியிருந்தாலும், கண்மாய்க்கு தண்ணீர் கொண்டு செல்லாததால் வறண்டு கிடக்கிறது. அதே நேரம் வன்னிக்குடி, மேல, கீழபசலை கண்மாய்கள் வைகை நீரால் நிரம்பியுள்ளன. கரிசல்குளம் கண்மாய்க்கு வைகை ஆற்று நீர் கொண்டுவர வேண்டும். ஆதிமூலம், திருப்புவனம்: விவசாயிகள் மத்திய அரசின் ஊக்கத்தொகை பெற நிரந்தர எண் பெற வேண்டும் என கேட்கிறீர்கள். ஆனால், இ- சேவை மையங்களில் நிரந்தர எண் பெற முடியாது என்கின்றனர். அதே போன்று தட்கல் திட்டத்தில் மின்இணைப்பிற்கு பதிய கால அவகாசம் நீட்டிக்க வேண்டும். சுந்தரமகாலிங்கம், இணை இயக்குனர்: 2019 க்கு முன் பதிந்த விவசாயிகளுக்கு தான் பிரதமரின் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அனைத்து விவசாயிகளும் நிரந்தர எண் பெற பதிவு செய்ய தடையில்லை. சந்திரன், சிவகங்கை : கட்டாணிபட்டி, 48 ம் கால்வாய், லெசீஸ், ஷீல்டு கால்வாய்களின் கீழ் 139 கண்மாய்களுக்கு பெரியாறு அணை தண்ணீர் விட வேண்டும். ஆனால், தினமும் 60 கன அடி வீதம் 90 நாட்களில் 63 கண்மாய்களுக்கு மட்டுமே தண்ணீர் கொடுத்துள்ளனர். விஸ்வநாதன், சிவகங்கை: ரூ.28.88 கோடியில் கட்டப்படும் ஷீல்டு கால்வாய் பணி தரமின்றி நடப்பதாக இன்றைய நாளிதழில் (தினமலர் செய்தி எதிரொலி) செய்தி வெளியானது. ஷீல்டு கால்வாய் கட்டும் பணி தரமாக நடப்பதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். கலெக்டர் : கால்வாய் கட்டும் பணியில் உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு இன்னும் நிதி விடுவிக்கவில்லை. பணிகளை பொதுப்பணித்துறை பொறியாளர்கள் நன்கு ஆய்வு செய்த பின்பு தான் விடுவிக்கப்படும். இவ்வாறு விவாதம் நடந்தது.

கருகும் நெற்பயிர்

காளையார்கோவில் அருகே சாக்குளம், விளாங்காட்டூர், பாலேந்தல், கிராம்புளி, பளுவூர், சிறியூர் உள்ளிட்ட பகுதி கண்மாய்களில் நீரின்றி நெற்பயிர்கள் கருகி வருகின்றன. எனவே இப்பகுதி நெல் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என விவசாயி சாத்தப்பன், காய்ந்த நெற்பயிர்களை காண்பித்து கலெக்டரிடம் முறையிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை