உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / குழந்தை தொழிலாளர்களை அமர்த்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் 

குழந்தை தொழிலாளர்களை அமர்த்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் 

சிவகங்கை: மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய நிறுவன உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் மூலம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார். அவர் கூறியதாவது: மாவட்ட அளவில் குழந்தை தொழிலாளர்களை கண்டறிய குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு குழுவினர் சிவகங்கை, காரைக்குடி பகுதியில் விசாரணையில் ஈடுபட்டனர். ஜன.,ல் மேற்கொண்ட சோதனையின் போது பந்தல் அமைக்கும் பணியில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவனை ஈடுபடுத்தியதை கண்டறிந்து, போலீஸ் மூலம் வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை சிவகங்கை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் பந்தல் நிறுவன உரிமையாளருக்கு ரூ.40,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். 2021ல் காரைக்குடியில் நடந்த சோதனையில் 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்திய கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இந்த வழக்கு விசாரணை காரைக்குடி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்தது. இதில், கடை உரிமையாளருக்கு ரூ.21,000 அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். குழந்தை தொழிலாளர் திருத்த சட்டம் 2016 ன் படி 14 வயதிற்கு உட்பட்டவர்களை வேலைகளில் அமர்த்தினால் குற்றமாகும். குறிப்பாக அபாயகரமான தொழில் தொடர்புடைய பணிகளான செங்கல் சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்ற பணிகளில் நியமிக்க தடை உள்ளது. இந்த தடையை மீறினால் ரூ.20,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். அல்லது 6 மாதங்களுக்கு குறையாமலும், 2 ஆண்டிற்கு மேற்படாமல் சிறை தண்டனை அல்லது இரண்டு சேர்த்து வழங்கப்படும். எனவே மாவட்ட அளவில் குழந்தை தொழிலாளர்கள் கண்டறியப்பட்டால் https://pencil.gov.in'' ல் தெரிவிக்கலாம். மேலும், சைல்டு லைன் எண் 1098, சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் ஊராட்சி, அரசனிபட்டி ரோட்டில் உள்ள தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை