துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை: சுகாதாரம் பாதிக்கும் அபாயம்
தேவகோட்டை நகரில் 27 வார்டுகளில் 55 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். 200க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் உள்ளன. தெருக்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை நகராட்சியே, ஊருணிகளுக்கு செல்லும் பிரதான மழைநீர் வாய்க்கால்களில் இணைத்து விட்டனர். இதனால் மழைநீர் வாய்க்காலே இல்லை. எல்லாமே கழிவு நீர் கால்வாய் தான்.இந்த கால்வாய்களை கான்கிரீட் கால்வாய்களாக கட்டினர். ஆனால் நீர்மட்டம் பார்த்து கட்டாததால் கழிவுநீர் அப்படியே குப்பை கழிவுகளுடன் தேங்கி நிற்கிறது. அனைத்து கழிவுநீர் கால்வாய்களும் சுத்தம் செய்யப்படாமல் துர்நாற்றத்துடன், கொசு உற்பத்தி மையமாக மாறிவிட்டது.கழிவுநீர் கால்வாய் நிலை இப்படி இருக்க தெருக்களில் குப்பைகளை சுத்தம் செய்வது மோசமான நிலையில் உள்ளது. குப்பையை சுத்தம் செய்ய போதிய துாய்மை பணியாளர்கள் இல்லாததால் சுத்தம் செய்வதில்லை. சில இடங்களில் அள்ளாமல் தீ வைத்து எரிப்பது வாடிக்கையாகி விட்டது. நகராட்சியில் துப்புரவுக்கான உபகரணங்கள், வாகனங்கள் கொடுத்தும் பணி செய்ய ஊழியர் இல்லை. பணியாளர்கள் இல்லை
50 ஆண்டுகளுக்கு முன்பு தேவகோட்டையில் 17 வார்டுகள் இருந்த போது தூய்மை பணியாளர்கள் 126 பேரும், கொசுஒழிப்பு மலேரியா பிரிவில் 8 பேரும் பணியாற்றினர். தற்போது 27 வார்டுகள் மக்கள் தொகை இரு மடங்காகி இருக்கிறது. நகரமும் விரிவடைந்து வீடுகள் அதிகரித்துள்ளன.ஆனால் தற்போது நிரந்தர துப்புரவு பணியாளர் வெறும் 26 பேர் மட்டுமே பணிபுரிகின்றனர். ஓய்வு பெற்றால் புதியவர்கள் நியமிக்கப்படுவதில்லை. சுகாதார மேற்பார்வையாளர்களும் பாதியாகி விட்டனர். இதனால் நகரின் துப்புரவு பணி கேள்விக்குறியாகி வருகிறது.துப்புரவு பணியில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் துப்புரவு பணியாளர்களை குறைந்த அளவே நியமித்து உள்ளனர். தனியார் பணியாளர்கள் குப்பைகளை வாங்குவதோடு சரி தெருவை கூட்டுவதில்லை. சாக்கடை கால்வாய்களையும் சுத்தம் செய்வதில்லை. குப்பை வரி வாங்கியும் சுகாதாரம் மோசமான நிலையில் இருப்பதால் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.நகராட்சி சுகாதார பிரிவில் விசாரித்த போது அடிப்படை அத்தியாவசிய பணியான துப்புரவு பிரிவில் போதிய பணியாளர்கள் இல்லை. தனியார் பணியாளர்களை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைத்தான் பார்க்க சொல்ல முடியும்.கூடுதல் பணி வாங்க முடியவில்லை. நிரந்தரமாக, தனியார் இரண்டு பிரிவிலும் கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லையேல் சுகாதாரம் மோசமான நிலைக்கு சென்று விடும் என்றனர்.