சிங்கம்புணரி மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையால் அவதி
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் செவிலியர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இங்குள்ள அரசு மருத்துவமனையில் 7 செவிலியர் பணியிடங்கள் உள்ள நிலையில் 2 பேர் பணி மாறுதலாகி சென்று விட்டனர். 5 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களில் இரவு பணி, காலை பணிக்கு தலா 2 பேர், மதியம் ஒருவர் என பணி பிரிக்கப்பட்டுள்ளது. பணி நேரத்தில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்கோ, பிரசவத்திற்கோ யாரும் வந்தால் அவர்களை கவனிக்கவே செவிலியர்களுக்கு நேரம் சரியாக உள்ளது. அந்த நேரங்களில் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்களை கவனிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. அப்படி இருந்தும் ஓய்வு நேரத்தில் செவிலியர்கள் கூடுதல் பணிகளை கவனித்து வருகின்றனர். உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்றிய குளுக்கோஸை மாற்ற கூட நேரமில்லாமல் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். எனவே பணி மாறுதலில் சென்றவர்களுக்கு பதிலாக செவிலியர்களை நியமிப்பதுடன், கூடுதல் பணியிடங்களை உருவாக்கி டாக்டர், செவிலியர்களை பணியமர்த்த பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.