முதல்வர் திறந்தும் பயன்பாட்டிற்கு வராத சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் கடைகள்
சிவகங்கை; சிவகங்கை பஸ் ஸ்டாண்ட் ரூ.1.90 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டது. திட்டமிட்டபடி பணிகள் அனைத்தும் முழுமை அடையாததால் மக்கள் சிரமப்படுகின்றனர்.சிவகங்கை பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியை ரூ.1.95 கோடியில் புதுப்பிக்கும் பணி 2023 மார்ச் 8 துவங்கியது. பஸ் ஸ்டாண்டிற்குள் 18 கடைகள், தரைதளம், கழிப்பிடம் கட்ட திட்டமிடப்பட்டது. ஒப்பந்ததாரர் இந்த பணியை ஒப்பந்த காலத்திற்குள் முடிக்கவில்லை. பணியை முடிக்கும் வரை அவர் அபராதம்செலுத்த நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.இதனையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பஸ் ஸ்டாண்ட் மூடப்பட்டு தரைதளத்தில் கான்கிரீட் பணி நடந்தது. பணிகள் முறையாக நிறைவு பெறாத நிலையில் பஸ்கள் உள்ளே சென்றதால் பூச்சு பெயர்ந்து துாசி பரவியது. பயணிகள் பாதிக்கப்பட்டனர். இதன் அருகில் 18 கடைகள் கட்டி முடிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு இதை முதல்வர் ஸ்டாலின் சிவகங்கை வந்தபோது துவக்கி வைத்தார். அவர் துவக்கி வைத்து 10 நாட்களை கடந்தும் கடைகள் பயன்பாட்டிற்கு வரவில்லை.கமிஷனர் கிருஷ்ணாராம் கூறுகையில், பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட கடைகளுக்கு ஒப்பந்தம் விரைவில் விடப்பட்டு திறக்கப்பட உள்ளது. பஸ் ஸ்டாண்ட் பின் பகுதியில் தரைதளம் சரிசெய்ய வேண்டியுள்ளது. ஒப்பந்ததாரரிடம் கூறியுள்ளோம். அவை சரிசெய்யப்படும் என்றார்.