உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இருளில் சிவகங்கை: தவிக்கும் மக்கள்

இருளில் சிவகங்கை: தவிக்கும் மக்கள்

சிவகங்கை : சிவகங்கை நகரில் முக்கிய தெருக்களில் எரியாத தெருவிளக்கு களால் பெண்கள் முதியவர்கள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். சிவகங்கை நகரில் 27 வார்டுகளில் 100க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன.பெரும்பாலான தெருக்களில் தெருவிளக்குகள் எரிவதில்லை. இருள் சூழ்ந்து காணப்படுகிறது. நகராட்சியில் மேம் பாலத்தில் இருந்து அரண்மனை வரையிலும், மஜித்ரோடு, மருத்துவக் கல்லுாரி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெரு விளக்குகள் எரிவதில்லை. எரியும் சில விளக்குகளும் போதிய வெளிச்சமின்றி உள்ளது. மருத்துவக் கல்லுாரி ரோட்டில் உள்ள மின் விளக்குகள் சில தினங்களாக இரவு நேரத்தில் எரியாததால் பெண்கள் நடந்து செல்ல அச்சப் படுகின்றனர். இதேபோல் ஆயுதப்படை குடியிருப்பு 48 காலனியில் இருந்து அண்ணாநகர் வழியாக பனங்காடி ரோடு, தொண்டி ரோட்டில் இருந்து ஆயுதப்படை வழியாக செல்லும் சுற்றுச்சாலையில் தெருவிளக்குகள் இல்லை. பெரும்பாலான தெருக்களில் வணிக நிறுவனங்களில் எரியும் விளக்குகளால் மட்டுமே ஓரளவு ரோட்டில் வெளிச்சம் தெரிகிறது. வணிக நிறுவனங்கள் இரவு 9:00 மணிக்கு மேல் மூடிவிட்டால் தெருக்கள் முழுவதும் இருள் சூழ்ந்து விடுகிறது. எனவே நகராட்சி நிர்வாகம் எரியாத மின்விளக்குகளை எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !