இந்தியா நடத்திய சிந்துார் ஆப்பரேஷனின் போது பாக்., அனுப்பிய ட்ரோனை வீழ்த்தி சாதனை சிவகங்கை ராணுவ வீரருக்கு தங்க பதக்கம்
சிவகங்கை: இந்தியா நடத்திய 'சிந்துார்' ஆப்பரேஷனின் போது பாகிஸ்தான் அனுப்பிய 'ட்ரோனை' நீண்ட போராட்டத்திற்கு பின் வீழ்த்தி சாதனை படைத்த சிவகங்கை ராணுவ வீரர் டி.கந்தனுக்கு ஆக.,15 புனேவில் நடந்த சுதந்திர தின விழாவில் தங்க பதக்கம், சான்று வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே வண்டல்குறிச்சி விவசாயி தங்கவேலு மகன் கந்தன் 49. சாலைக்கிராமம் அரசு பள்ளியில் பிளஸ் 2 வரை படித்தார். 1993 - 96 வரை சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லுாரியில் பி.எஸ்சி., (வேதியியல்) பட்டம் பெற்றார். கல்லுாரி படிப்பின் போதே என்.சி.சி.,யில் பயிற்சி பெற்றார். ராணுவத்தில் சாதிக்கும் நோக்கில் 1997ல் ராணுவத்தில் சேர்ந்தார். மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் 2 ஆண்டுகள் டெக்னிக்கல் பயிற்சி பெற்று இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். 2019 முதல் 2022 வரை டில்லியில் உள்ள மத்திய தீவிரவாதம் மற்றும் விமான கடத்தல் தடுப்பு பிரிவில் (என்.எஸ்.ஜி.,) சிறப்பு பயிற்சி பெற்றார். 2025 மே மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கையில் எடுத்த 'சிந்துார்' ஆப்பரேஷனின் போது பாகிஸ்தான் அனுப்பிய 'ட்ரோனை' அழித்து சாதனை புரிந்தார். அவருக்கு புனேயில் நடந்த சுதந்திர தின விழாவில் தங்க பதக்கம், சான்று வழங்கப்பட்டன. டி.கந்தன் கூறியதாவது: 1999 கார்கில் போரின் போது, 'ஆப்பரேஷன் விஜய்'யில் போரிட்டு வெற்றி பெற்றதற்காக, 2022 ஜன., 26 ல் குடியரசு தினத்தன்று டில்லியில் நடந்த விழாவில் டி.ஐ.ஜி., பாராட்டு சான்று வழங்கினார். 2025 மே மாதம் காஷ்மீர் எல்லை வழியாக புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை சுட்டுகொன்றனர். இந்தியா 'சிந்துார்' ஆப்பரேஷனை கையில் எடுத்தது. அந்த ஆப்பரேஷன் குழுவின் தலைவராக இருந்தேன். இந்திய தளவாடங்களை அழிக்க பாகிஸ்தான் நவீன 'ட்ரோனை' அனுப்பியது. இதை கண்டறிந்து 1:30 மணி நேர போராட்டத்திற்கு பின் செயல் இழக்க செய்தோம். இப்பணிக்காகவே பூனே ராணுவ தலைமையகத்தில் நடந்த சுதந்திர தின விழாவில் இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரல் உபேந்திர திபேதி கையால், 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றிக்கான தங்க பதக்கமும், பாராட்டு சான்றும் பெற்றேன் என்றார். சிவகங்கையை சேர்ந்த ராணுவ வீரர் கமாண்டோ டி.கந்தன்.சிவகங்கையை சேர்ந்த ராணுவ வீரர் கமாண்டோ டி.கந்தன்.