உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை வாலிபர் கொலை: 2 பேர் கைது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

சிவகங்கை வாலிபர் கொலை: 2 பேர் கைது உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு

சிவகங்கை: சிவகங்கை அருகே தமறாக்கி வாலிபர் மனோஜ் பிரபு 29, ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய இருவரை போலீசார் கைது செய்தனர். ஆனால் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி உறவினர்கள் உடலை வாங்க மறுத்து விட்டனர்.தமறாக்கி (தெற்கு) செல்லச்சாமி மகன் மனோஜ்பிரபு ஜூலை 4 இரவு நண்பர்கள் ஹரிஹரன், அஜித்துடன் டூவீலரில் இடையமேலுாரில் நடந்த இன்னிசை நிகழ்ச்சியை பார்த்து விட்டு டூவீலரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். புதுப்பட்டி அருகே நம்பர் பிளேட் இல்லாத காரில் வந்த கும்பல் ஒன்று மனோஜ் பிரபு ஓட்டிய டூவீலரில் மோதியது. பின் காரில் இருந்து இறங்கிய கும்பல் வாளால் ஓட ஓட விரட்டி மனோஜ்பிரபுவை படுகொலை செய்து தப்பியது.சிவகங்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்ள மனோஜ் பிரபு உடலை வாங்க மறுத்து, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக தமறாக்கி தென்னரசு மகன் கார் டிரைவர் வசந்தகுமார் 21, வேலாங்கப்பட்டி சோணை மகன் சூர்யா 26, ஆகியோரை கைது செய்தனர். தப்பிய அபிமன்யு உட்பட 6 பேரை தேடி வருகின்றனர். ஆனால் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்தால் மட்டுமே மனோஜ் பிரபு உடலை வாங்குவோம் என அவரது உறவினர்கள் தெரிவித்து விட்டனர்.

கொலைக்கான சதி திட்டம்

மனோஜ் பிரபுவை கொலை செய்ய நாகர்கோவிலில் இருந்து பழைய காரை கொலையில் ஈடுபட்டோர் வாங்கி வந்துள்ளனர். காரில் இருந்தவாரே அவரை நோட்டமிட்டுள்ளனர். ஜூலை 4 இரவு இடையமேலுார் கோயில் திருவிழா கலைநிகழ்ச்சிக்கு வந்த அவரை, அங்கேயே கொலை செய்ய முயன்றனர். ஆனால் அங்கு வாய்ப்பு கிட்டவில்லை. இதனால் கலைநிகழ்ச்சி முடிந்து டூவீலரில் வீட்டிற்கு சென்ற போது, காரில் பின்தொடர்ந்து சென்று கொலை செய்தனர் என போலீசார் தெரிவித்தனர்.

போலீஸ் பாதுகாப்பு

மனோஜ்பிரபு கொலை தொடர்பாக அபிமன்யூ உட்பட 6 பேரை போலீசார் தேடி வருகின்றனர். அவர்களால் மனோஜ் பிரபு குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் வரலாம் என்ற நோக்கில் அவரது சகோதரரான ராணுவ வீரர் அஜித்குமாருக்கும், அவரது வீட்டிற்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !