முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
சிவகங்கை: மாவட்ட அளவில் சிவகங்கை, குன்றக்குடி முருகன் கோயில்களில் கந்த சஷ்டியை முன்னிட்டு நேற்று மாலை பக்தர் களின் 'அரோகரா கோஷத்துடன்' சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோயிலில் உள்ள சுப்பிரமணியர் சன்னதி, குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில், திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் உள்ள முருகன் கோயில் உட்பட அனைத்து முருகன் கோயில்களில் காப்பு கட்டுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. பக்தர்கள் கையில் காப்பு கட்டி கந்த சஷ்டி விரதத்தை துவக்கினர். தினமும் முருகன் சன்னதியில் பெண்கள் கந்தனுக்கு அரோகரா, கந்தகுரு கவசம் பாடி விரதத்தை மேற்கொண்டனர். கந்த சஷ்டி விழாவின் 5ம் நாளான நேற்று முன்தினம் அம்பாளிடம் இருந்து வேல் வாங்கி, முருகனுக்கு அளிக்கும் 'வேல்வாங்கும்' நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் 6ம் நாளான நேற்று மாலை 4:30 மணி முதல் 6:00 மணிக்குள் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. பக்தர்கள் அரோகரா கோஷமிட்டு முருகனை வழி பட்டனர். திருப்புத்துாரில் கீழரதவீதி சீரணி அரங்கில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில், முருகன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளினார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் தலைமையில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட அளவில் அனைத்து முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை, சூரசம் ஹாரம் நடைபெற்றது. 7ம் நாளான இன்று காலை 10:40 முதல் 11:30 மணிக்குள் தெய்வானையை முருகன் மணம் முடிக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. * மானாமதுரை வழிவிடு முருகன் கோயிலில் சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று அதிகாலை நடைபெற்ற சூரசம்ஹார விழாவை முன்னிட்டு முருகன் மற்றும் வள்ளி,தெய்வானைக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டு அலங்கார பூஜைகள் நடைபெற்றது. மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், அங்காள பரமேஸ்வரி, கால்பிரபு செல்வமுருகன், அலங் காரகுளம் பாம்பன் முருகன் கோயில் மற்றும் இளையான்குடி அருகே பெரும்பச்சேரி வேல்முருகன் கோயிலிலும் சூரசம்ஹார விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து சுவாமியை வழிபட்டனர்.