மேலும் செய்திகள்
மழையில்லா சோகத்தில் குன்றத்து விவசாயிகள்
25-Aug-2025
திருப்புத்துார்; திருப்புத்துார் பகுதியில் வழக்கமான மழை இல்லாததாலும், கண்மாய்களில் நீர் இருப்பு இல்லாததாலும் விவசாயிகள் நெல்சாகுபடிக்கான விதைப்பு பணிகளை துவக்காமல் உள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தென் மேற்கு பருவ மழை குறைவால் விவசாயப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.திருப்புத்துார் வட்டாரம் வானம் பார்த்த பூமி. சில மாதங்களாக பரவலாக மழை பெய்தாலும் திருப்புத்துார் பகுதியில் சில மாதங்களாக சராசரியை விட குறைவாகவே மழை பெய்து வருகிறது. கண்மாய்களில் வழக்கமான நீர் இருப்பு இல்லை. பாசன பற்றாக்குறையால் இப்பகுதியில் ஆடிப்பட்டத்திற்கு விதைக்காமல், தாமதமாக, ஆவணி துவக்கத்தில் விவசாயிகள் நாற்றங்கால் விதைப்பு அல்லது நேரடி விதைப்பில் ஈடுபடுவதுண்டு. ஆனால் இம்முறை அதற்கும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. போதிய மழை இல்லாததால் வயல்களை உழுத விவசாயிகள் பின்னர் விதைப்பு பணிகளில் ஈடுபடவில்லை. இப்பகுதியில் கோடையில் கூட 250 ஏக்கர் அளவில் இரண்டாம் போகம் சாகுபடி நடந்த நிலையில் தற்போது விவசாயப்பணிகள் நடைபெறாமல் உள்ளது. திருக்களாப்பட்டி விவசாயி அழகு ராஜா கூறுகையில், '2021 முதல் அக்னி நட்சத்திரத்தில் மழை பெய்து கண்மாய்களில் நீர் இருப்பு இருந்தது. இதனால் ஆவணியில் விதை பாவி மார்கழியில் அறுவடை செய்தோம். நான்கு ஆண்டுகளாக மழை நன்றாக பெய்தது. இந்த ஆண்டு மீண்டும் மழை பொய்க்க துவங்கியுள்ளது. இதனால் புரட்டாசிக்கு பின் தான் நடவு செய்ய முடியும். தைக்கு பின் தான் அறுவடை செய்ய முடியும்' என்றார். என்.புதுார் விவசாயி அழகர் கூறுகையில், 'கடந்த ஆண்டு கண்மாய்களில் நீர் இருந்ததால் இந்நேரம் விதைத்திருந்தோம். இப்போது கண்மாய்களில் நீர் இல்லை. மழையும் சரியாக பெய்யவில்லை. 15 நாள் தாமாதமாகி விட்டது. மழை பொய்த்தால் மேலும் விவசாயப்பணி தாமதமாகும்' என்றார். வி.ஏ.ஓ.,தரப்பில் கூறுகையில், 'பரவலாக நடவு பணிகள் நடைபெறவில்லை. தற்போது வெப்பச்சலனத்தால் பெய்யும் மழை திருப்புத்துார் பகுதியில் சரியாக பெய்யவில்லை. இப்பகுதி விவசாயிகள் வடகிழக்கு பருவமழையை நம்பித்தான் உள்ளனர். அக்.ல் துவங்கும் இந்த பருவ மழை நன்றாக பெய்தால் தான் விவசாயிகள் நெல்சாகுபடி பணிகளை துவக்குவார்கள் என்றனர் பொதுப்பணித்துறையினர் கூறுகையில், 'கடந்த ஆண்டு ஆக.முதல் வாரத்தில் மழை துவங்கி விட்டது. மணிமுத்தாறில் நீர் வரத்தும் இருந்தது. தற்போது காரைக்குடி பகுதியில் பெய்த அளவு திருப்புத்துார் பகுதியில் மழை இல்லை. ஆனால் பெய்துள்ள மழையால் பூமி குளிர்ந்துள்ளது.இதனால் வடகிழக்கு பருவ மழை உரிய காலத்தில் துவங்கி தொடர்ந்து பெய்தால் எளிதாக கண்மாய் பெருகி விடும்.' என்றனர். வேளாண்துறை உதவி இயக்குனர் செந்தில்நாதன் கூறுகையில், 'ஆடிப்பட்டத்திற்கான மழை போதிய அளவில் இங்கு பெய்யவில்லை. வழக்கத்தை விட 40 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது. அடுத்து தொடர்ந்து மழை பெய்ய வேண்டும். திருப்புத்தூர் பகுதியில் செப். 3வது வாரத்தில்தான் பெரும்பாலோனோர் விதை பாவுவது வழக்கமாகி விட்டது. விதைகள் விற்பனை கூட வேகமாக இல்லை. ஆர்.என்.ஆர்., ஆடுதுறை போன்ற சன்னரக நெல் விதைகள் போதிய அளவில் இருப்பில் உள்ளது. விவசாயிகள் வாங்கிக் கொள்ளலாம். என்றார். திருப்புத்துார் பகுதியில் 30 ஆண்டுகளுக்கு முன் 15 ஆயிரம் ஏக்கர் அளவில் நெல்சாகுபடி நடந்த நிலையில், தற்போது படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு 7ஆயிரம் ஏக்கர் அளவில் நெல்சாகுபடி நடந்தது. இந்த ஆண்டு அதை எட்டுவது கூட மழையைப் பொறுத்தே உள்ளது. ஆற்றுப்பாசனமும் கைகொடுப்பதில்லை, மழையும் பொய்த்து விடுகிறது. நிலத்தடி நீரும் சில இடங்களில் மட்டுமே செறிவாக உள்ளதால் நெல்சாகுபடி என்பது திருப்புத்தூர் வட்டாரத்தில் விவசாயிகளுக்கு போராட்டமாகவே உள்ளது.
25-Aug-2025