ஊராட்சிகளில் கிடப்பில் சிறப்பு திட்டம்
சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டத்தில் மலைப்பாங்கானஊராட்சிகளில் அறிவிக்கப்பட்ட சிறப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் மலைப்பாங்கான ஊராட்சியில் தலா ரூபாய் 10 லட்சம் மதிப்பில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்ள சிறப்பு திட்டம் நிறைவேற்றப்படும் என தமிழக அரசு 2023ல் அறிவித்தது. 278 ஊராட்சிகளில் பணிகளை மேற்கொள்ள 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் எஸ்.புதுார் ஒன்றியத்தில் மேலவண்ணாரிருப்பு ஊராட்சியும், சிங்கம்புணரி ஒன்றியத்தில் மேலப்பட்டி, ஒடுவன்பட்டி, பிரான்மலை, செல்லியம்பட்டி ஆகிய ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டது. பணிகள் தேர்வு செய்யப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் பல மாதங்கள் ஆகியும் இன்னும் இப்பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் கிராம சபை கூட்டங்களில் ஊராட்சி தலைவர்களை பொதுமக்கள் கேள்வி கேட்கின்றனர். மேலும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் விரைவில் முடியும் நிலையில் இத்திட்டம் காலாவதி ஆகிவிடுமோ என்ற கவலையில் உள்ளனர். எனவே உடனடியாக இப்பணிகளுக்கு நிர்வாகஅனுமதி வழங்க ஊராட்சித் தலைவர்களும் பொது மக்களும் வலியுறுத்தியுள்ளனர். அதிகாரிகளிடம் கேட்டபோது விரைவில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு பணிகள் துவங்கும் என்றனர்.