விளையாட்டு போட்டி: அரசு பள்ளி முதலிடம்
சிவகங்கை : சிவகங்கை குறுவட்ட அளவிலான தடகள போட்டி, விளையாட்டுப் போட்டி மேட்டுப்பட்டி சுவாமி விவேகானந்த மெட்ரிக் பள்ளியில் நடந்தது. இதில் சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டனர். மாணவிகள் பிரிவில் கிருத்திகா 8000 மீ, 1500 மீ, 400 மீ மற்றும் தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றார். 14 வயது மாணவிகள் பிரிவில் பிரியதர்ஷினி 600 மீ ஓட்டத்தில் 2வது இடமும், 400 மீ ஓட்டத்தில் ஷிகிஷ்மா 3 வது இடம் பிடித்தனர். மாணவர்கள் பிரிவில் பிரவீன் 1500 மீ ஓட்டத்தில் முதலிடமும், 3000 மீ ஓட்டத்தில் 2ம் இடமும், ராஜாமணி உயரம் தாண்டுதலில் முதலிடம், விமல்ராஜ் 400 மீ மற்றும் 200 மீ ஓட்டத்தில் 2ம் இடம், நீளம் தாண்டுதலில் கெளசிக்ராஜா 3ம் இடம், அல்லுமணி 3000 மீ ஓட்டத்தில் 3 வது இடம் பிடித்தனர். கால் பந்து மாணவர்கள் பிரிவில் இறுதி போட்டிக்கு வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் சம்பத்குமார், உதவி தலைமையாசிரியர் கணேசன், உடற்கல்வி ஆசிரியர் இளந்திரையன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினர்.