பாஸ்ட் டேக்கில் பணம் இருந்தும் நிறுத்தப்பட்ட அரசு பஸ்
திருப்பாச்சேத்தி: மதுரை-பரமக்குடி 4 வழிச்சாலை திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியில் பணம் இருந்தும் அரசு டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகினர்.மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு போகலுார், திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடியை காரைக்குடி கோட்டத்தை சேர்ந்த 90 பஸ்களும் மதுரை கோட்டத்தை சேர்ந்த 25 பஸ்களும் தினசரி கடக்கின்றன. பாஸ்ட் டேக் ஒட்டப்பட்டுள்ள அரசு பஸ்கள் திடீரென பழுதானால் அதற்கு பதிலாக மாற்றுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால் சுங்கச்சாவடியில் இந்த பஸ்களை அனுமதிக்க மறுக்கின்றனர்.நீண்ட நேரம் காத்து கிடந்து கிளை மேலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பேசிய பின் பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்றன. நேற்று மதியம் மதுரையில் இருந்து கிள்ளுகுடி சென்ற அரசு டவுன் பஸ் பாஸ்ட் டேக்கில் ஆயிரம் ரூபாய் பணம் இருந்தும் ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர். இதனால் பயணிகள் இறங்கி ஆட்டோ, வேன்களில் சென்றனர். பாஸ்ட் டேக்கில் உள்ள வண்டி எண் வேறாக இருப்பதால் சுங்கசாவடி ஊழியர்கள் அனுமதிக்க மறுத்தனர்.ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் டவுன் பஸ் அனுமதிக்கப்பட்டது. மாற்று பேருந்துகளுக்கு என பாஸ்ட் டேக் இருந்தும்அனுமதிக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. சுங்கச்சாவடி ஊழியர்கள் கூறுகையில், குறிப்பிட்ட மாற்று பேருந்துகள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் போக்குவரத்து கழக அதிகாரிகள் திடீர் திடீரென வேறு பஸ்களை இப்பாதையில் இயக்குகின்றனர்.பஸ் ஊழியர்கள் கூறுகையில், காலையில் இதே பாஸ்ட் டேக் வைத்து வாகுடி சென்று வந்தோம். தற்போது அனுமதிக்க மறுக்கின்றனர்.