உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பொங்கல் பானையை காய வைக்க  முடியாமல் தவிப்பு 

பொங்கல் பானையை காய வைக்க  முடியாமல் தவிப்பு 

சிவகங்கை: மண்ணை பொன்னாக்கும்' மானாமதுரையில் பொங்கல் பானைகளை சூளையில் வேக வைக்க முடியாமல் மண்பாண்ட தொழிலாளர்கள் திணறி வருகின்றனர்.தென் தமிழகத்தில் மண் பாண்ட பொருட்கள் தயாரிக்க பெயர்பெற்ற மற்றும் சிறந்த மண் உள்ள இடம் மானாமதுரை. இங்கு 50 தொழிற்கூடங்களில் சீசனுக்கு ஏற்ப மண்பாண்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இசையை வளர்க்க மண்ணால் செய்த கடம்', நாதஸ்வரம், சமையலில் சுவை கூட்ட சமையல் பானைகள், தமிழர்களின் தை திருநாளில் பொங்கல் வைத்து வழிபட உகந்த மானாமதுரை மண் பானைகள் என ஏராளமான பொருட்கள் தயாரித்து வியாபாரிகள் மூலம் தமிழகம் முழுவதும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.இங்குள்ள கூட்டுறவு நிறுவனம், தனியார் தொழிற்கூடங்கள் மூலம் மாதத்திற்கு ரூ.20 லட்சம் மதிப்புள்ள மண்பாண்ட பொருட்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். தை பொங்கல் சீசன் காலங்களில் இங்கு 10,000 பொங்கல் பானைகள் தயாரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் பொங்கல் பானை தயாரிக்கும் பணியை தொழிலாளர்கள் துவக்கி விடுவர்.பக்குவமாக தயாரித்த மண் பானைகளை சூளையில்' அடுக்கி வைத்து வேக வைப்பார்கள். இந்த பானைகள் தான் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அக்., முதல் தொடர்ந்து மேலடுக்கு சுழற்சி, வடகிழக்கு பருவமழை பெய்தது. இதனால் சூளையில் மண்பானைகளை அடுக்கி சூடுபடுத்த முடியாமல் தொழிலாளர்கள் தவித்தனர். இதன் காரணமாக இந்த ஆண்டு பொங்கல் பானை தயாரிப்பு எண்ணிக்கையை குறைத்து விட்டனர். இங்கு தயாரிக்கப்படும் மண் பானையின் அளவை பொறுத்து பானை ஒன்று ரூ.50 முதல் 80 வரை விற்கப்படுகின்றன.

பொங்கலுக்கு 20 நாட்களே...

தை பொங்கல், மாட்டு பொங்கலுக்கு 20 நாட்களே உள்ள நிலையில் சூளை அமைத்து மூட்டம் போட போதுமான வெயில் அடித்தால் மட்டுமே பொங்கல் பானைகளை வேகமாக தயாரிக்க முடியும் என்ற நிலைக்கு தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பானை மூலம் ரூ.5 லட்சம்

எஸ்.கனகு மெய்யப்பன், மண்பாண்ட தொழிலாளர்,மானாமதுரை: ஆண்டு தோறும் பொங்கலுக்கு மட்டுமே மானாமதுரை தொழிற்கூடங்களில் இருந்து தயாரிக்கப்படும் பொங்கல் பானைகள் ரூ.5 லட்சம் வரை விற்கப்படும். இந்த ஆண்டு அக்., மாதத்தில் இருந்தே பலத்த மழை பெய்ததால், சூளையில் பானைகளை அடுக்கி சுடவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், நல்ல வெயில் அடித்தால் மட்டுமே சூளை போட்டு பானைகளை அதிகளவில் தயாரிக்க முடியும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ