| ADDED : பிப் 16, 2024 05:24 AM
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே கிராமங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் மாணவர்களின் உயர்கல்வி பாழாகி வருகிறது.இவ்வொன்றியத்தில் எஸ்.வையாபுரிபட்டி ஊராட்சிக்குட்பட்ட சிறுமருதூர் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இக்கிராம மக்கள் சிங்கம்புணரி மற்றும் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு வந்து செல்ல எந்த பஸ் வசதியும் இல்லை. இதனால் 3 கி.மீ., நடந்து சென்றே பஸ் ஏற வேண்டிய நிலையில் உள்ளனர்.இங்குள்ள நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மேற்படிப்புக்காக பிரான்மலை செல்ல வேண்டியுள்ளது. பஸ் போக்குவரத்து இல்லாததால் பலர் மேல்நிலை மற்றும் கல்லூரி படிப்புகளை தொடர முடியாமல் உள்ளனர். அப்பகுதி மக்கள் கூறும்போது, எங்கள் கிராமத்திற்கு பஸ் வசதி இல்லை. இதனால் குழந்தைகளை மேற்படிப்புக்கு அனுப்ப முடிவதில்லை, பெண்களை திருமணம் செய்து கொடுக்கவும், வெளியிலிருந்து திருமணம் முடித்து அழைத்து வருவதிலும் பிரச்னைகள் உள்ளன.எனவே காலை மாலை 2 வேளைகளிலும் எங்கள் கிராமம் வழியாக சிங்கம்புணரி, -பிரான்மலை மற்றும் பொன்னமராவதிக்கு பஸ் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.