எஸ்.புதுாரில் பஸ்களின்றி மாணவர்கள் தவிப்பு
எஸ்.புதூர்: எஸ்.புதூர் ஒன்றியத்தில் கட்டுக்குடிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலை, அரசு மாதிரி மேல் நிலைபள்ளிகளில் 10, 11 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு தினமும் மாலை 5:00 மணிவரை சிறப்பு வகுப்புகள் நடக்கிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் தங்களது ஊர்களுக்கு செல்ல மாலை 4:30 மணி வரை அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் சிறப்பு மாணவர்கள் 5:15க்கு கேசம்பட்டி விலக்கு வந்து 6:30 மணி வரை பஸ்சுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. இதனால் மாணவர்கள் வீடுகளுக்கு தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதி என்பதால் மாணவர்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர். தினமும் மாலை 5:30 மணிக்கு கேசம்பட்டி விலக்கிற்கு பஸ்கள் இயக்கினால் சிறப்பு வகுப்பு மாணவர்களுக்கு பயனாக இருக்கும் என தெரிவித்தனர்.