பள்ளிச்சீருடை வரவில்லை மாணவர்கள் அவதி
சிங்கம்புணரி : சிங்கம்புணரி, எஸ்.புதுார் பகுதியில் அரசுப்பள்ளிகளில் படிக்கும் முதல் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மாதங்கள் ஆகியும் இலவச சீருடை வராததால் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் அரசு சார்பில் இலவச சீருடை வழங்கப்படுகிறது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆண்டிற்கு 4 செட் சீருடை வழங்கப்படும் நிலையில் இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு செட் சீருடை கூட இன்னும் வழங்கப்படவில்லை. பள்ளி துவங்கி 3 மாதங்களைக் கடந்தும் சீருடை வழங்கப்படாததால் மற்ற மாணவர்களின் சீருடைகளை தலைமை ஆசிரியர்கள் பிரித்துக் கொடுத்து சமாளித்து வருகின்றனர். மாணவர்களுக்கு சீருடை வழங்கும் பொறுப்பை அரசு இந்த ஆண்டு சமூக நலத் துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்துள்ளது. சமூக நலத்துறை மூலம் நியமிக்கப்பட்ட சுய உதவிக் குழு பெண்கள் சீருடை தயாரித்துக் கொடுத்து வருகின்றனர். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வியாண்டின் இறுதியில் அளவு எடுக்கப்பட்டு சீருடை வந்துவிட்டது. ஆனால் ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ள நிலையில் இன்னும் அளவு எடுக்க கூட யாரும் வரவில்லை. இதனால் சீருடை வழங்க இன்னும் தாமதம் ஆகலாம் என்ற நிலை உள்ளது. விரைந்து மாணவர்களுக்கு அளவு எடுத்து சீருடை வழங்க பெற்றோர்களும் ஆசிரியர்களும் வலியுறுத்தி யுள்ளனர்.