பள்ளி முன் தேங்கிய கழிவு நீர் மாணவ, மாணவியர் அவதி
திருப்புவனம்: மடப்புரம் ஊராட்சியை சேர்ந்த வடகரை அரசு தொடக்கப் பள்ளி வாசலில் கழிவு நீர் தேங்கி இருப்பதால் மாணவ, மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 45 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பள்ளி அருகே வடகரை நகரின் கழிவு நீர் செல்லும் வாய்க்கால் உள்ளது. அடிக்கடி வாய்க்கால் நிரம்பி பள்ளி முன் தேங்கி நிற்கிறது. வாசலிலேயே தண்ணீர் தேங்கி நிற்பதால் அதன் வழியே மாணவ, மாணவிகள் நடந்து செல்கின்றனர். பகல் முழுவதும் பள்ளியிலேயே மாணவ, மாணவியர் துர்நாற்றத்தின் மத்தியில் கல்வி பயில்கின்றனர். டெங்கு பரவி வரும் சூழலில் பள்ளி அருகே கழிவு நீர் தேங்கி நோய் தொற்றை ஏற்படுத்துவதுடன் சுகாதார கேட்டையும் ஏற்படுத்தி வருகிறது.