உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நீரில் மூழ்கிய நெல் பயிர்: தவிக்கும் விவசாயிகள்

நீரில் மூழ்கிய நெல் பயிர்: தவிக்கும் விவசாயிகள்

திருப்புவனம் : திருப்புவனம் அருகே கணக்கன்குடியில் மழை காரணமாகவும், மடையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீராலும் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.திருப்புவனம் அருகே கணக்கன்குடி கண்மாயை நம்பி அப்பகுதி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். பூவந்தி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து கணக்கன்குடி கண்மாய்க்கு வரும், மழை காரணமாக கண்மாயில் நீர் நிரம்பியதால் இந்தாண்டு 100 ஏக்கரில் என்.எல்.ஆர்., ஆர்.என்.ஆர்., கோ 50, கோ 51 உள்ளிட்ட நெல் ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.வைகை ஆற்றில் நீர் திறப்பிற்கு முன்னரே கணக்கன்குடி கண்மாய்க்கு நீர் வரத்து இருந்ததால் விவசாயிகள் செப்டம்பரிலேயே நெல் நடவு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.தற்போது மூன்று மாதங்களில் நெற்பயிர்கள் பால் பிடிக்கும் தருணத்தில் உள்ளன. ஏற்கனவே கண்மாய் நிரம்பிய நிலையில் மழை காரணமாக தொடர்ந்து நீர்வரத்து இருந்ததால் விவசாயிகள் மடை மூலம் தண்ணீரை பாசனத்திற்கு வெளியேற்றினர்.அதிகப்படியான தண்ணீர் வெளியேறியதாலும், தொடர் மழை காரணமாகவும் கண்மாயை ஒட்டிய 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்களை மூழ்கடித்து தண்ணீர் சென்ற வண்ணம் உள்ளது.16ம் தேதி வரை மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் வயலில் உள்ள தண்ணீர் வடிந்தால் தான் நெற்பயிர்களை காப்பாற்ற முடியும், அனைத்து வயல்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் தண்ணீர் வடிய வாய்ப்பில்லை என விவசாயிகள் கருதுகின்றனர்.விவசாயிகள் கூறுகையில்: ஏக்கருக்கு இதுவரை 20 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ள நிலையில் வயல்களில் முழங்கால் அளவு தண்ணீர் நிற்கிறது.நெற்பயிர்கள் அனைத்தும் மூழ்கி விட்டன. தண்ணீரை வடிய வைக்க முடியவில்லை. பாசன கால்வாய்கள் அனைத்திலும் செடி கொடிகள் அடர்த்தியாக இருப்பதால் தண்ணீர் வெளியேறாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் சூழல் நிலவுகிறது என புலம்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி