உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் கோடை விவசாய சாகுபடி பரப்பு குறைகிறது

திருப்புவனத்தில் கோடை விவசாய சாகுபடி பரப்பு குறைகிறது

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கோடை விவசாய சாகுபடி பரப்பளவு குறைந்து வருவதால் விவசாய கூலி தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம் வட்டாரத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பி திருப்புவனம், மாரநாடு, கலியாந்துார், பழையனுார் உள்ளிட்ட பகுதிகளில் பத்தாயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. ஜனவரியில் அறுவடைக்கு பின் கண்மாயில் தண்ணீர் இருந்தால் கண்மாயை ஒட்டியுள்ள பகுதிகளிலும் பம்ப்செட் வைத்துள்ள விவசாயிகளும் கோடை விவசாயம் செய்வது வழக்கம்.திருப்புவனம் வட்டாரத்தில் ஆயிரம் ஏக்கரில் கோடை விவசாயம் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அது பாதியாக குறைந்து விட்டது. 2024ல் 425 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் விவசாயம் 2025ல் 335 ஏக்கராக குறைந்து விட்டது. விவசாயத்தையே நம்பியிருந்த விவசாய கூலி தொழிலாளர்களை இது பாதித்துள்ளது. மழவராயனேந்தல், வெள்ளக்கரை உள்ளிட்ட பகுதிகளில் களை எடுப்பது, நாற்று நடுவது. உழவு செய்வது உள்ளிட்ட பணிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். நாள் ஒன்றுக்கு 400 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கிடைக்கும், கோடை விவசாய சாகுபடி குறைந்ததால் வேலையின்றி கூலி தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில்: வடகிழக்கு பருவமழையை நம்பி செப்டம்பரில் நெல் விவசாயத்திற்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும், விளைச்சலும் 25 மூடையே கிடைக்கும், கோடை விவசாயத்தில் செலவு அதிகரிக்கும், ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும், விளைச்சலும் அதிகபட்சமாக 30 மூடை வரையே கிடைக்க வாய்ப்புண்டு, கோடை விவசாயத்திற்கு மான்ய விலையில் நெல் வழங்கப்படுவது இல்லை. செலவு அதிகரித்துள்ள நிலையில் வேளாண்துறை சார்பில் எந்த வித உதவியும் கிடைப்பதில்லை. மேலும் கோடையில் குறைந்த அளவிலேயே நெல் சாகுபடி நடைபெறும்.பன்றிகளால் சேதப்படுத்தப்படும் வயல்களுக்கு இழப்பீடு கிடைக்காது. இதனால் பலரும் கோடை விவசாயம் மேற்கொள்ள தயங்குகின்றனர்.கோடை விவசாய சாகுபடி செய்யாமல் இருப்பதால் விவசாய நிலங்களும் தரிசாக மாறி கருவேல மரங்கள் அதிகளவில் வளர வாய்ப்புண்டு, எனவே மாவட்ட நிர்வாகம் கோடை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை