தமிழகத்தில் இரு மொழி திட்டம் தான்
காரைக்குடி,: ''தமிழகத்தில் அரசின் கொள்கையும், மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கக்கூடிய கொள்கையும் இரு மொழி திட்டம் தான். இதனை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்,'' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். காரைக்குடியில் அவர் கூறியதாவது:தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சிந்தனை இருக்கின்றதோ அதற்கு நேர்மறையான கருத்து தெரிவிப்பவர் தான் தமிழக கவர்னர். மற்ற மாநிலங்களில் மூன்று மொழிகள் இருக்கிறது என்பதே தவறு.பல மாநிலங்களில் ஹிந்தி பேசும் இளைஞர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். ஹிந்தி பேசக்கூடிய பல மாநிலங்களில் ஒரு மொழி திட்டம் தான் உள்ளது. அங்கு ஆங்கில ஆசிரியர்களும் இல்லை. ஆங்கில புத்தகங்களும் இல்லை. ஆங்கிலம் கற்றுத் தருவதும் இல்லை. அவர்களுக்கு ஒரு சொற்களை கூட ஆங்கிலத்தில் எழுத முடியாது. தமிழகத்தில் பல ஆண்டுகளாக இரு மொழி திட்டம் தான். எந்த அரசு வந்தாலும் அதை கடைபிடிக்கிறது. ஆனால், விரும்பியவர்கள் ஹிந்தி படிக்கக்கூடாது என்று தெரிவிக்கவில்லை. தனியார் பள்ளிகளில், சி.பி.எஸ்.சி., பள்ளிகளில், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஹிந்தி கற்றுத் தருகின்றனர். ஹிந்தியை விரும்பி படிக்கும் மாணவர்களுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அரசின்கொள்கை, மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கக்கூடிய கொள்கை இரு மொழி திட்டம் தான். இதனை கவர்னர் புரிந்து கொள்ள வேண்டும்.