உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காளையார்கோவிலில் 95 ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடிக்கு தணிக்கை தடை நோட்டீஸ் ஆசிரியர்கள் அதிர்ச்சி

காளையார்கோவிலில் 95 ஆசிரியர்களுக்கு ரூ.3 கோடிக்கு தணிக்கை தடை நோட்டீஸ் ஆசிரியர்கள் அதிர்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் 95 பேருக்கு தணிக்கை தடைக்கான விளக்க நோட்டீஸ் அளித்துள்ளதால், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சிவகங்கை மாவட்டத்தில் 12 ஊராட்சி ஒன்றியத்தின் கீழ், வட்டார கல்வி அலுவலகம் செயல்படுகிறது. காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலகத்தின் கீழ் உள்ள 150 க்கும் மேற்பட்ட அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, தலைமை ஆசிரியர்கள் 450 க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர்.இவர்களுக்கான சம்பளம், பண மற்றும் பணிப்பலன்கள் காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் மூலம் வழங்கப்படுகிறது.ஆசிரியர்களுக்கான ஊக்க சம்பள உயர்வு, விடுப்பு கணக்கு, சீனியர், ஜூனியர் ஆசிரியர் சம்பள முரண்பாடு, உயர்கல்வி பயில்வதற்கு துறை முன் அனுமதி ஆகியவற்றை வட்டார கல்வி அலுவலர்களே வழங்கி வருகின்றனர்.இந்நிலையில், இந்த வட்டார கல்வி அலுவலகத்தில் 2017--2018 முதல் 2022-2023 ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுக்கான துறை தணிக்கை 2023 ஆக.,28 முதல் செப்., 1ம் தேதி வரை நடந்தது.இந்த தணிக்கை முடிவின்படி 95 ஆசிரியர்களுக்கு தணிக்கை தடை உள்ளதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். குறிப்பாக பணிப் பதிவேட்டில் பதிவு செய்யாதது, மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுமதி பெறாதது உள்ளிட்ட தவறுகள் என குறிப்பிட்டுள்ளனர். இந்த பணிகளை வட்டார கல்வி அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் தான் செய்ய வேண்டும். ஆனால் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டுள்ளது, ஆசிரியர்களிடையே கடும் மன உளைச்சலையும், அவர்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

முதல்வரின் நடவடிக்கை தேவை

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறியதாவது: ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் பல ஆயிரம் ரூபாய் முதல் ரூ.3 லட்சம் வரை திரும்ப ஒப்படைக்க கோரி தணிக்கை தடை விளக்க நோட்டீஸ் அளித்துள்ளனர்.அந்த வகையில் 95 ஆசிரியர்கள் ரூ.3 கோடி வரை திரும்ப செலுத்துமாறு நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜன.,6 முதல் நோட்டீஸ் வழங்கி, 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க கூறியுள்ளனர். இது ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கைக்கு இன்று வரும் முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

தணிக்கை கணக்காளரின் நோட்டீஸ்

காளையார்கோவில் வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன் கூறியதாவது, சென்னை ஆடிட்டர் ஜெனரலில் (தணிக்கை கணக்காளர்) இருந்து நோட்டீஸ் வந்துள்ளது. அதை வட்டார கல்வி அலுவலர் என்ற முறையில் 95 ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ளேன். இது குறித்து நடக்கும் கூட்டு அமர்வில், ஆசிரியர்கள் தங்களது தரப்பு நியாயத்தை தெரிவித்து, தீர்வு பெறலாம். இது வழக்கமான விஷயம் தான். ஆசிரியர்கள் அதிர்ச்சியாக ஒன்றும் இல்லை, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ