கட்டிக்குளத்தில் ஜல்லிக்கட்டு வீரர்களை பறக்க விட்ட காளை
மானாமதுரை: மானாமதுரை அருகே உள்ள கட்டிக்குளத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.15 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.கட்டிக்குளம் திருவேட்டை அய்யனார் கோயில் விழாவை முன்னிட்டு அரசு அதிகாரிகள் மற்றும் கட்டிக்குளம் கிராம முக்கியஸ்தர்கள்,விழா கமிட்டியினர் ஜல்லிக்கட்டு உறுதிமொழி வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்று ஜல்லிக்கட்டு துவங்கியது. முதலில் கோயில் மாடுகள்வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. பின்னர் சிவகங்கை,ராமநாதபுரம், விருதுநகர், மதுரை,புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 700க்கும் மேற்பட்ட மாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.பிடிக்க வந்த வீரர்களை காளைகள் துாக்கி வீசியது. எனினும் களத்தில் இருந்த வீரர்கள் உற்சாகமாக காளைகளை பிடித்தனர். மாடுகளைப் பிடித்த மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு முத்தனேந்தல் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.