திருப்புவனத்தில் தொடர் மழை களை இழந்த கால்நடை சந்தை
திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று காலை நடந்த வாரச்சந்தையில் போதிய ஆடு,கோழி விற்பனைக்கு வராததால் வியாபாரிகள் ஏமாற்றமடைந்தனர்.சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் வட்டாரத்தில் தான் அதிகளவு கால்நடைகள் வளர்க்கப்படுகின்றன. வாரம்தோறும் செவ்வாய் கிழமை நடைபெறும் கால்நடை சந்தைக்கு கேரளா, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆடு, கோழி, வாங்க பலரும் வருவர். கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்பவர்களும் தேவைக்கு ஏற்ப ஆடு, கோழி விற்பனை செய்ய கொண்டு வருவார்கள், தீபாவளி, ஆடி, பக்ரீத், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட விசேஷ தினங்களில் கால்நடைகள் விற்பனை களை கட்டும், சாதாராண நாட்களில் 500 ஆடுகள் வரை விற்பனையாகும்.விசேஷ நாட்களில் இரண்டாயிரம் ஆடுகள், கோழிகள் வரை விற்பனையாகும். கார்த்திகை பிறந்ததை ஒட்டி ஏராளமானோர் கோயிலுக்கு விரதம் தொடங்கியதால் போதிய அளவு கால்நடைகள் வரத்தும் இல்லை, வியாபாரிகளும் வரவில்லை. விவசாயிகள் கூறியதாவது: தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆடு, கோழிகளை கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.மேலும் பலரும் மாலை அணிந்து விரதம் இருப்பதால் அவர்களும் அசைவம் சாப்பிடுவதில்லை. அவர்கள் குடும்பத்தினரும் சாப்பிடுவதில்லை எனவே உரிய விலை கிடைக்காது என்பதால் ஆடு, கோழிகளை கொண்டு வரவில்லை. இனி தை பிறந்தால் தான் விலை கிட்டும், என்றனர்.