உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நகராட்சி பெண் கமிஷனர் காலையில் மாயம்... மாலையில் திரும்பினார் ஊழியர்கள் நிம்மதி

நகராட்சி பெண் கமிஷனர் காலையில் மாயம்... மாலையில் திரும்பினார் ஊழியர்கள் நிம்மதி

தேவகோட்டை : தேவகோட்டையில் பணிக்கு வர வேண்டிய நகராட்சி கமிஷனர் தாமரை 57, அலுவலகம் வராததால் பதற்றமடைந்த ஊழியர்கள் அவரை தேடினர். மாலையில் அவர் வீடு திரும்பியது அறிந்து நிம்மதியடைந்தனர்.-சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகராட்சி கமிஷனராக தாமரை பணிபுரிகிறார். இவர் ராம்நகர் கமிஷனர் குடியிருப்பு வளாகத்தில் வசிக்கிறார். நேற்று அதிகாலை 5:00 மணிக்கு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அலைபேசியையும் வீட்டிலேயே வைத்து சென்றதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.வீட்டு பணிக்கு சென்ற பணியாளர் கமிஷனர் இல்லாததால் நகராட்சி அலுவலர்களிடம் அலுவலகம் வந்தாரா என விசாரித்தார். அலுவலகத்திற்கு அவர் வராத நிலையில் அதிர்ச்சியடைந்த அலுவலர்கள் அக்கம் பக்கம் விசாரித்ததுடன் சிசிடிவி கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். கமிஷனர் நடந்து சென்று ராம்நகர் முருகன் கோயிலில் தரிசனம் செய்வது தெரிந்தது. தொடர்ந்து தேவகோட்டை பஸ் ஸ்டாண்டிலிருந்து ராமேஸ்வரம் சென்ற பஸ்சில் அவர் ஏறியதும் தெரிந்தது.நகராட்சி அலுவலர்கள் கமிஷனரை தேடி ராமேஸ்வரம் சென்றனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராமேஸ்வரம் போலீசாருக்கும் தெரிவித்தனர். பெண் கமிஷனர் மாயமானது நகராட்சி அலுவலக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று மாலை 4:30 மணிக்கு தேவகோட்டை ராம்நகர் பஸ் ஸ்டாப்பில் பஸ்சிலிருந்து இறங்கிய கமிஷனர் வீட்டுக்கு சென்றார். தேனியிலிருந்து வந்த கமிஷனரின் கணவரும் இதுகுறித்து நகராட்சி ஊழியர்களிடம் தெரிவித்து அவர்களை ராமேஸ்வரத்திலிருந்து திரும்பி வரும்படி கூறினார்.கமிஷனரை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் சந்தித்தனர். ராமேஸ்வரத்திற்கு தரிசனம் செய்ய சென்றதாகவும், மகளுக்கு வளை காப்பு தீர்த்தம் எடுத்து வர அங்கு சென்றதாகவும், தகவல் தெரிவிக்காததுடன் அலைபேசியையும் வீட்டில் வைத்து சென்றதால் பிரச்னை ஆகி விட்டதாக கமிஷனர் தெரிவித்துள்ளார்.இருப்பினும் கமிஷனர் மனஅழுத்தம் அல்லது வேலை பளு காரணமாக சென்றாரா என போலீசார் விசாரித்தனர்.இதற்கிடையில் கமிஷனர் தாமரையை பரமக்குடி நகராட்சி கமிஷனராக கூடுதல் பொறுப்பாக நியமித்து நேற்று மாலை உத்தரவு வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ